மும்பை விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
மும்பை:ஒரு நாள் பயணமாக, நேற்று மஹாராஷ்டிரா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மும்பை, விலே பார்லே விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர், மூன்று புதிய, மெட்ரோ ரயில் வழித்தடங்களையும் துவக்கி வைத்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, சட்டசபை தேர்தல், விரைவில் நடக்க உள்ளது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் பயணமாக, நேற்று மஹாராஷ்டிரா வந்தார். மும்பை விமான நிலையத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, பா.ஜ., மாநில தலைவர், சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர், பிரதமரை வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து, நேராக விலே பார்லே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார்.பின், அங்கிருந்து, சுதந்திர போராட்ட வீரர், லோகமான்ய திலகரால் துவங்கப்பட்ட லோக்மான்ய சேவா சங்க கட்டடத்திற்கு சென்றார். அங்கு, திலகரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.பின், பாந்த்ராவில் உள்ள, ஜியோ வேர்ல்ட் சென்டர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை, மக்கள் ஊர்வலமாக நடத்தி கொண்டாட வேண்டும்என்ற வழக்கத்தை, லோகமான்ய திலகர் தான், முதன் முதலாக துவக்கி வைத்தார்.நுாறு ஆண்டுகளுக்கு முன் அவர் உருவாக்கிய வழக்கம், இன்றும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் போது,கடல் நீர் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள், கடலில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். அதே போல, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.