முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா!
காரிமங்கலம்: காரிமங்கலம் மொரசுப்பட்டி முருகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (ஏப்., 5) நடக்கிறது. காரிமங்கலம் அடுத்த மொரசுப்பட்டி முருகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு போடுதல் நிகழ்ச்சியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான அலகுகள் குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முன்னாள் எம்.பி., ராமராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மாலையில் ஸ்வாமி திருவீதி உலாவும், 6ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி பவன வருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் அபிதா குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சியும், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்கிறது.
* தர்மபுரி நெசவாளர் காலனி, சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், பூஜையும் நடக்கிறது. பக்தகர்கள் காவடி எடுக்கும் நிகழ்ச்சியும், ஸ்வாமதி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி அன்னசாகரம் விநாயக, சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், இன்று பங்குனி உத்திர தேர்திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் பால்குடம் ஏந்தி திருவீதி உலா வருதலும், சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து தோரண வாயில் ஊஞ்சல் சேவையும், ஸ்வாமி மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடந்தது. நேற்று விநாயகர் ரதம், யானை வாகனத்தில் உற்சவமும் நடந்தது. இன்று (ஏப்., 5) காலை 9 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறுதலும், நிலை பெயர்த்தலும், மஹாரதம் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அன்னசாகரம் செங்குந்த சிவநேய செல்வர்கள், விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.