திருப்பரங்குன்றம், சோலைமலை கோயில்களில் கந்தசஷ்டி விழா
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காலை கம்பத்தடி மண்டப அனுக்ஞை விநாயகர் முன் நடந்த பூஜைக்கு பின் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலைபூஜை நடந்தன.
சுவாமிக்கு காப்பு கட்டுதல்: உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. விழா நம்பியார் சிவாச்சார்யார் செல்லப்பாவிற்கு காப்பு கட்டப்பட்டு விரதமிருக்கும் பக்தர் களுக்கு சிவாச்சார்யார்கள் காப்பு கட்டினர். பக்தர்கள் விழா நாட்களில் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். உச்சிகால பூஜை முடிந்தபின் தேன்,சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் எலுமிச்சம் சாறும், இரவு பால் வழங்கப்படும்.
சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்வாக நவ., 1ல் வேல் வாங்குதல், 2ல் சூரசம்ஹாரம், 3ல் காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சட்டத்தேரில் எழுந்தருளி தேரோட்டம், மாலை தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
சோலைமலை: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா விக்னேஷ்வரர் பூஜை யுடன் துவங்கியது. உற்ஸவருக்கு 16வகை அபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தன. வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சண்முகார்ச்சனை நடந்தன. இன்று (அக்.29) காலை யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை நடக்கிறது. நவ., 2 முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா நடக்கிறது தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடக்கிறது. நவ.,3ல் காலை திருக்கல்யாண உற்ஸவம், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல்சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடனும் திருவிழா நிறைவு பெறுகிறது. தினமும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப் பாளர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.