உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்

தேனி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்

தேனி: கந்த சஷ்டி துவங்கியதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் முருகன்  கோயில்களில் பக்தர்கள் சஷ்டி விரதத்திற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன்,  விசேஷ அலங்கார பூஜைகள் நடந்தது.

* தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயிலில் சஷ்டியை  முன்னிட்டு, காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் ஸ்ரீவள்ளி குஞ்சரி  வடிவழகருக்கு ராஜ அலங்காரம், சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டது. பின், காலை  7:00 மணி முதல் சஷ்டி நோன்புக்கான காப்புக்கட்டும் நிகழ்வு, பக்தர்கள் சஷ்டி  பாராயணம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி  தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றுச் சென்றனர். பின், சக்கரத்தாழ்வார் அம்மனுக்கு  பூஜை செய்யப்பட்டு, சுவாதி நட்சத்திர பூஜை, நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தது.  பூஜை, அலங்காரங்களை ராஜேந்திரன் தலைமையிலான அர்ச்சகர்கள்  செய்திருந்தனர்.

* தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள வேல்முருகன் கோயில் சஷ்டி பூஜை  துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் காப்புக்கட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

* தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரகார  தெய்வங்களான வள்ளி தெய்வானை சுவாமி, அலங்கரிக்கப்பட்டு சஷ்டி காப்பு  கட்டும் நிகழ்சசி நடந்தது. ஏராளமான பெண்கள் காப்பு கட்டி, சுவாமி தரிசனம்  செய்தனர்.

* கம்பம்: கம்பம் பகுதி முருகன் கோயில்களில்  கந்த சஷ்டி விழா துவங்கியது. 5 வாரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் முருகன்  பல்வேறு  அலங்காரங்களில் எழுந்தருள்வார்,. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், வீதி உலா  நடைபெறும். முன்னதாக நேற்று (அக்., 28) காலை கம்பம் வேலப்பர் கோயில்,  கம்பராயப்பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றது.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு அபி ஷேக ஆராதனைகளில் பங்கேற்று, காப்பு கட்டி விரதத்தை துவங்கினார்கள்.    சண்முகாநதி அணைக்கு அருகில் உள்ள சண்முகாநாதன் கோயிலிலும் சஷ்டியை  முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன்  துவங்கியது. இதனையொட்டி முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

* போடி:  சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தக்கார்  அண்ணாதுரை தலைமையில்  துவங்கியது. முருகனுக்கு கலச சிறப்பு அபிஷேகம்,  தீபாரதனைகள், விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை  விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார்.  ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.  கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தினந்தோறும் முருகனுக்கு  சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது.

* கூடலுார்: சுந்தரவேலவர் திருக்கோயிலில் 22 வது ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சுந்தரவேல வருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மகளிர்  குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. ஒரு வாரம்  நடைபெறும் இவ்விழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானோர் காப்பு  கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.  இன்று (அக்., 29) கல்லுாரி பேராசிரியை  தமிழ்செல்வி ஆறுபடை வீட்டுத் தத்துவம்’ என்ற தலைப்பில்சமய  சொற்பொழி வாற்றுகிறார்.

* பெரியகுளம் ஞானம்பிகை சமேத  காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று  முதல் கந்த சஷ்டி விழா துவங்கியது. மூலவர் பாலசுப்பிரமணியர்,  வள்ளி,தெய்வானையுடனும், உற்சவர் ராஜஅலங்காரத்திலும் காட்சியளித்தனர்.  ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி  கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார–திருக்கல்யாண திருவிழா   துவங்கியது. நவ.,  3 வரை ஏழு நாட்கள் திருவிழா நடக்கிறது. காலையில் பாலசுப் பிரமணியருக்கு  பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம் உட்பட அபிேஷக பொருட்களில்  ஆராதனை நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார். மாலையில் உற்சவர்களான பாலசுப்பிரமணியர், வள்ளி,  தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.   நவ.2ம் தேதி  சூரசம்ஹாரமும், மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

பெரியகுளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு ள்ளனர். திருவிழாஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !