காலபைரவாஷ்டமி பெருவிழா: 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு பூஜை
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காலபைரவாஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்கள் குடமுழுக்கு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில், 12ம் ஆண்டு காலபைரவாஷ்டமி பெருவிழா கடந்த, 11ல் துவங்கியது. 11 முதல் வரும், 21 வரை திங்கள் முதல் வியாழன் வரை, 11 நாட்கள் பைரவ மாலை அணியும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 12 காலை கொடியேற்றமும், ஐங்கரன் வேள்வியும், மாலை, பரத நாட்டிய நிகழ்ச்சியும், விநாயகர் நகர்வலமும் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில், 63 நாயன்மார்களுக்கு, கலசம் வைத்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், யாகம் ஆகியவை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, பக்தி பண்பாட்டு நெறியில் நாம் செல்கிறோமா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும், இரவு, பக்த மார்கண்டேயர், நாடகமும் நடந்தன. இன்று காலை, திருமுருகன் தீந்தமிழ் வேள்வி, ஆலமர்ச்செல்வர் சிறப்பு அபிஷேகமும், சுப்பிரமணியம் பெருமாள் நகர்வலமும் நடக்க உள்ளது.