ஜடேருத்ரசாமி தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சத்தியமங்கலம்: ஆசனூர் மலைப்பகுதியில், ஜடேருத்ரசாமி தேர்த்திருவிழா நேற்று நடந்தது. சத்தியமங்கலம் அடுத்த, ஆசனூர் மலைப்பகுதியில் கேர்மாளம் அருகே, சிக்குன்சேபாளையம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு, வழக்கம் போல் கடந்த, 11ல் நடுக்கரை மாதேஸ்வரன் கோவிலில் எண்ணெய் மஞ்சன சேவை, பால்குடம் எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஜெடேருத்ரசாமி மற்றும் கும்பேஸ்வர சுவாமிக்கு எண்ணெய் மஞ்சன சேவை, தீப அலங்காரம், பால்குடம் எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி உலா நடந்தது. நாளை மறு பூஜை நடைபெறுகிறது. திருவிழாவில் கேர்மாளம், கெத்தேசால், கோட்டாடை, மாவள்ளம், கடம்பூர், ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால், ஹனூர், உடையார்பாளையம், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேர் உலா வருவதை கண்டுகளித்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஜடேருத்ரசுவாமியை வழிபட்டனர்.