உள்ளூர் செய்திகள்

குழந்தை வரம் பெற...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி வழிபட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது. குழந்தை வரம் பெற இங்குள்ள அறம் வளர்த்த நாயகி சன்னதியில் பிரதோஷத்தன்று உச்சிக்காலத்தில் வழிபாடு நடக்கிறது.கொல்லிமலை பகுதியை ஆட்சி செய்தவர் வல்வில் ஓரி. ஒருமுறை வேட்டைக்குச் செல்லும் போது வெள்ளைப் பன்றி ஒன்றின் மீது அம்பு தொடுக்க, தப்பியோடி புதருக்குள் மறைந்தது. புதரை விலக்கிய மன்னர் சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு, வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அறிந்து மகிழ்ந்தார். உடனே அந்த இடத்தில் 'கைலாச நாதர்' என்னும் பெயரில் கோயில் எழுப்பினார். சுயம்பு லிங்கமாக மூலவர் கைலாசநாதர் இருக்கிறார். சுவாமியின் மேனியில் அம்பு பட்ட தழும்பு உள்ளது. இக்கோயிலின் அம்மன் அறம்வளர்த்த நாயகி. திருமணமான பெண்கள் பிள்ளை வரம் பெற பிரதோஷத்தன்று நடக்கும் உச்சிக்கால பூஜையில் அரிசி, தேங்காய், பழம், உப்பில்லாத சாதம் படைத்து வழிபடுகின்றனர்.ஒரே கல்லால் ஆன 'சகட விநாயகர்' இங்கிருக்கிறார். மாணவர்கள் இவரை வழிபடுகின்றனர். முருகப்பெருமானுக்கு பால தண்டாயுதபாணி, கல்யாண சுப்பிரமணியர் என இரு சன்னதிகள் உண்டு பிரகாரத்தில் உள்ள சிவதுர்க்கைக்கு ஆடி கடைசி வெள்ளியன்று சங்காபிஷேகம் நடக்கிறது. பிரகாரத்தைச் சுற்றும் போது முதலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், முடிவில் ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி சன்னதியும் உள்ளன. இங்கு வழிபட்டால் ஒரே நேரத்தில் காசி, ராமேஸ்வரத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எப்படி செல்வது: நாமக்கல் - சேலம் சாலையில் 26 கி.மீ., துாரத்தில் ஆண்டகளூர் கேட். அங்கிருந்து ராசிபுரம் சாலையில் 4 கி.மீ., விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம்.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 99943 79727, 94435 15036, 04287 - 223 252 அருகிலுள்ள கோயில்: நாமக்கல் ஆஞ்சநேயர் 27 கி.மீ., (வெற்றிக்கு...)நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 04286 - 233 999