சனாதன தர்மம் - 18
மூத்தோர் சொல் அமுதம்பகலும், இரவும் சந்திக்கும் வேளைக்கு சந்தி என்று பெயர். காலை, மாலை, சூரியன் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில் வழிபாடு செய்வது நம் கடமை என்கிறது வேதம். இதையே 'காணாமல் கொடு, கோணாமல் கெடு, கண்டு கொடு' என முன்னோர் சொல்லி வைத்தனர். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் சூரியனைக் காணாமல் அதிகாலையில் கடவுளுக்கு மலரிட்டு சிறிய கரண்டி தீர்த்தமாவது படைத்துவிடு என்பது தான். அதே போல உச்சி வேளை, மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பும் வழிபட வேண்டும் என்றனர் நம் முன்னோர். 'சலம் பூவொடு துாபம் மறந்தறியேன்' என்கிறார் திருநாவுக்கரசர். இந்த நேரங்களில் மனஒருமைப்பாடு குறைந்து சோம்பல் அதிகரிக்கும். அப்போது மனதை ஒழுங்குபடுத்தும் செயல்களைச் செய்வது நல்லது என்கிறது மனோதத்துவ அறிவியல். ஆனால் இதையெல்லாம் மூடநம்பிக்கை என தள்ளி விட்டோம். நம் மன ஒருமைப்பாட்டிற்காகவும், புத்துணர்ச்சியுடன் செயல்படவும் மூன்று நேரங்களிலும் வழிபாட்டில் ஈடுபடுவோம். இதனால் நம்மையும் அறியாமல் நன்மைகள் ஓங்கும். மார்க்கண்டேயருக்கு பதினாறு வயது என விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் சிவ வழிபாட்டில் ஈடுபட்டார். குறித்த நாளில் வழிபாட்டின் போது அவரது ஆயுள் முடிவடையும் நேரம் வந்தது. உயிரைப் பறிக்க எமதர்மன் வந்தான். மார்க்கண்டேயரோ சிவபூஜையில் இருந்தார். எமனால் அவர் மீது தனியாகப் பாசக்கயிறை வீச முடியவில்லை. எமன் என்ன செய்திருக்க வேண்டும்? சிவனை வணங்கி, ''சுவாமி... கடமையைச் செய்ய வந்திருக்கிறேன். அனுமதி தாருங்கள்'' என கேட்டிருக்க வேண்டும். அதை விட்டு ஆணவத்தில் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசுவதாக சிவலிங்கத் திருமேனி மீதும் வீசினான். பணிவின்றி தலைக்கனமாக நடந்ததால் சிவன் தன் இடது காலால் உதைத்து மாய்த்தார். எனவே 'காலகாலன்' எனப்பட்டார். மார்க்கண்டேய மகரிஷியை என்றும் பதினாறு என்று அருளி சிரஞ்சீவியாக ஆக்கினார். தேவர்கள் வேண்டிட எமதர்மன் மீண்டும் பிழைத்தான். இதுவே திருக்கடையூர் தலத்தின் வரலாறு. காலை, நண்பகல், மாலை வழிபாடு என்பது மனஒருமைப்பாட்டுக்கு மட்டுமல்ல, உயிரையே காக்கும் என்பதே நம் முன்னோர் தந்த செய்தி. ஏற்கனவே உணவு முறைகள் பற்றி சிந்தித்தோம். இரண்டு வேளை உணவு முறையைப் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் மூன்று வேளைகளாக மாற்றினோம். வாரியார் அருமையான உதாரணம் சொல்வார். குக்கர் இல்லாத காலம் அது. பானையில் சோறாக்கிட கொதித்த நீரில் அரிசியை இட்ட பின்னரும் அடிக்கடி திறந்து, திறந்து மீண்டும் கொஞ்சம், கொஞ்சம் அரிசியைப் இடுவார்களா என்றால் மாட்டார்கள். காரணம் ஏற்கனவே ஒருமுறை போட்ட அரிசியானது முழுமையாக வெந்திடவே மூடி வைப்பார்கள். இடையிடையே கொஞ்சம் சேர்த்தால் சோறு முழுமையாக வேகவே வாய்ப்பில்லை தானே! ஆனால் நாம் என்ன செய்கின்றோம் உணவு உண்ட பின்னர் இடையிடையே ஏதாவது உணவை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம் வயிற்றுக்குள்ளே... பிறகு முழுமையான செரிமானம் எப்படி ஆகும் எனக் கேட்பார். நாமும் இன்று பெரும்பாலும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். இரவு துாங்கும் முன்னர் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட வேண்டும். காரணம் துாங்கச் செல்லும் போது வயிற்றின் செரிமானப் பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே ஆழ்ந்த உறக்கம் வரும். இதை அறிவியலும் சொல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மாலையில் சூரியனின் மறைவுக்குப் பின்னர் உண்ண மாட்டார்கள். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இந்த விதியைப் பின்பற்றுகின்றன. ஆனால் நாமோ இரவு உணவின் நேரத்தை நள்ளிரவு வரை கொண்டு சென்று விட்டோம் என்பதை இரவு நேர பரோட்டா கடைகளே சாட்சி சொல்லும். அதனால்தான் நம் நாட்டில் இத்தனை மருத்துவமனைகள். இதற்கு மேல் விளக்கம் தேவையா என்ன? பிரார்த்தனை, உணவு நேரங்களை முன்னோர் சொல்படி பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.-தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870