உள்ளூர் செய்திகள்

தர்ம தேவதை!

தர்மத்தை நிலைநாட்டும் கருமாரியம்மனுக்கு மதுரையில் கோயில் உள்ளது. பவுர்ணமியன்று இவளை வழிபடுவது சிறப்பு. தல வரலாறு: காவிரிபூம்பட்டினத்தைச் சேர்ந்த கோவலனும், கண்ணகியும் மதுரை வந்து சேர்ந்தனர். அப்போது மதுரையை ஆட்சி செய்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பைத் திருடி விட்டதாக கோவலன் மீது குற்றம் சாட்டிய மன்னன், அவனைக் கொலை செய்ய உத்தரவிட்டான். கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த கண்ணகி துடித்தாள். அரண்மனைக்குச் சென்று மன்னனிடம் வாதிட்டு கோவலனைக் குற்றமற்றவன் என நிலைநாட்டினாள். சேரநாடு சென்று தெய்வமாக வானுலகம் புறப்பட்டாள். அவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி வழிபட்டான். இந்த வரலாற்றின் அடிப்படையில், கோவலன் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் இப்பகுதியில், உக்கிரகோலத்தில் 'கருமாரியம்மன்' கோயில் அமைக்கப்பட்டது. கருமாரியம்மன்: அம்மன் சிலை ஆறடி உயரம் கொண்டது. திரிசூலம், உடுக்கை, கத்தி, பொற்கிண்ணம் ஏந்திய இவளுக்கு, ஐந்து தலைநாகம் குடைபிடிக்கிறது. கருவறையின் அருகில் நின்று பார்த்தால் செல்வம் வழங்கும் லட்சுமியாகவும், பலிபீடத்தில் இருந்து பார்த்தால் சாந்தம் தவழும் சரஸ்வதியாகவும், தொலைவில் இருந்து தரிசித்தால் உக்கிரவடிவில் காளியாகவும் காட்சி தருகிறாள். பவுர்ணமியன்று சிறப்பு பூஜை நடக்கிறது. கண்ணகியின் வரலாறு, சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி முத்தாரம்மன், இசக்கியம்மன், மாசாணியம்மன், பிரத்யங்கிராதேவி, பத்ரகாளி, வக்ரகாளி, தில்லைக்காளி ஆகியோரின் பலிபீடம் உள்ளது. காசிவிஸ்வநாதருக்கு சந்நிதி உள்ளது. இந்த லிங்கம், கங்கோத்ரியில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஏழு பவுர்ணமி: அம்மனின் எதிரில் சிம்ம வாகனம், பலிபீடம் உள்ளது. பீடத்தைச் சுற்றி குரு, சுக்கிரன், ராகு, கேது கிரகங்கள் அம்மனை வழிபடும் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் அம்மனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், அம்பாளையும், இந்த கிரகங்களையும் வழிபட, கிரக தோஷம் நீங்கி வாழ்வு சிறக்கும். பவுர்ணமியன்று அம்மனை வணங்கினால், அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி ஏழு பவுர்ணமிக்கு நெய்தீபமேற்ற திருமணத்தடை நீங்கும். மரத்தில் தொட்டில் கட்டி, ஏழு பவுர்ணமியில் விளக்கேற்ற தடை நீங்கி புத்திரப்பேறு உண்டாகும். கர்ப்பிணி பெண்களுக்கு, சுகப்பிரசவம் ஆக வளையல் கட்டி வழிபாடு செய்கின்றனர். திருவிழா: ஆடி இரண்டாம் வெள்ளியில் 1008 சங்காபிஷேகம். திறக்கும் நேரம்: காலை 7.00- 9.00, மாலை 5.00- இரவு 9.00. இருப்பிடம்: மதுரை - திருப்பரங்குன்றம் ரோட்டில் பழங்காநத்தத்தை அடுத்துள்ள, அழகப்பன்நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள திருவள்ளுவர் நகர் 9வது தெரு. போன்: 97872 99966.