"ஈஸி டெலிவரி ஈஸ்வரி!
சாதம்' என்றால் 'சாதாரண சோறு'. அதுவே கடவுளுக்குப் படைக்கப்படும் போது, 'ப்ர'சாதம் ஆகி விடுகிறது. 'ப்ர' என்றால் 'கடவுள் தன்மை'. 'சவம்' என்றால், 'உயிரற்ற உடல்'. அதுவே 'ப்ர' சேர்ந்து கடவுள் தன்மை பெறும் போது, உயிருள்ள உடலாகி விடுகிறது. ஆம்...தாயின் கருவறையில் சிசுவை வைக்கும் கடவுள், அதற்கு உயிரூட்டி பூமியில் நடமாட விடுகிறார். பிரசவத்தின் போது ஒவ்வொரு தாயும் மறுபிறவியே எடுக்கிறாள். அந்தத் தாயின் உயிரைக் காப்பதும் கடவுளே. அவ்வகையில், பெண் தெய்வமான கர்ப்பரட்சாம்பிகை, திருக்கருகாவூர் என்ற தலத்தில் இருந்து, கர்ப்பவதிகளுக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்கிறாள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் இங்கு நெய் மருந்து தரப்படுகிறது. இங்கு சென்றால், குழந்தை இல்லாத தாய்மார்களுக்கும் வழி(வலி) பிறக்கும்.தல வரலாறு: ஒரு காலத்தில் திருக்கருகாவூர் முல்லைக்காடாக இருந்தது. அங்கு வாழ்ந்த நித்துருவர்,வேதிகை தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாக் குறையைப் போக்கும்படி, முல்லைவன நாதரை வழிபட்டனர். வேதிகையும் கருவுற்றாள். ஒருநாள், கணவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில், கர்ப்பவதியான வேதிகை மயக்கம் அடைந்து அவஸ்தைப்பட்டாள். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். உடல்நிலை சரியின்றி இருந்ததால் வேதிகையால் எழ முடியவில்லை. இதை அறியாத முனிவர் சாபமிட, கரு கலைந்து விட்டது. வேதிகை அம்பாளிடம் அழுது முறையிட்டாள். அம்மனே நேரில் வந்து, கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து, குழந்தை பிறக்கும் நாள் வரையிலும் பாதுகாத்து குழந்தையை ஒப்படைத்தாள். வேதிகைக்காக எழுந்தருளிய அம்பாளுக்கு, கர்ப்பரட்சாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. 'ரட்சித்தல்' என்றால் 'காப்பாற்றுதல்'. கருவைக் காப்பாற்றியவள் என்பதால் அந்தப் பெயர் வந்தது. அவள் அருள்பாலித்த ஊரின் பெயரிலும் 'கரு'சேர்ந்து, 'திருக்கருகாவூர்' ஆனது.புற்றுமண் லிங்கம்: முல்லைவன நாதர் புற்று மண்ணால் ஆனவர். சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவில் சுப்ரமணியர் உள்ளதால், இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். நவக்கிரக மண்டபத்தில், எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கி உள்ளது அதிசயம். சூரியன் எதிரில் குரு உள்ளார். எல்லாருமே அனுக்கிரக மூர்த்திகளாக இருக்கின்றனர். கிரகங்களே ஒற்றுமையாக இருப்பதால், இங்கு வந்தால், குழந்தை பிறப்பு தடை தொடர்பான எல்லா கிரக தோஷங்களும் நீங்கி விடும். கர்ப்பரட்சாம்பிகை அம்மன், இடது கையை இடுப்பில் வைத்தபடி, கர்ப்பத்தை தாங்கியிருக்கிறாள். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம்.மெழுகினால் திருமணம்: திருமணத்தடையுள்ள கன்னியரும், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் அம்மன் சந்நிதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் குழந்தைக்கு தொட்டில் கட்டியும், துலாபாரம் செய்தும் வழிபடுகின்றனர்.மழலை தரும் நெய்: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தையில்லாதவர்களுக்கு அம்மனின் பாதத்தில் வைத்து நெய் மந்திரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை தம்பதிகள் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும். இதற்கு பத்தியம் ஏதும் கிடையாது.சுகப்பிரசவ எண்ணெய்: கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக, அம்மனின் பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து, மந்திரித்து தரப்படுகிறது. பிரசவவலி ஏற்படும்போது இதை வயிற்றில் தடவினால் சுகப்பிரசவம் ஏற்படும். வயிறு வலிக்கும் இதைத் தடவலாம். திருவிழாக்கள்: வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ.,திறக்கும் நேரம்: காலை 6.00- 12.00, மாலை 3.00- 8.00. போன் : 04374 -273 502, 273 423.