உள்ளூர் செய்திகள்

சித்தடேக் சித்தி விநாயகர்

பெருமாளால் கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோயில், மகாராஷ்டிர மாநிலம் சித்தடேக்கில் உள்ளது. இவரை சித்தி விநாயகர் என்கிறார்கள்.தல வரலாறு: திரேதாயுகத்தில் பிரம்மன், கணபதியை வணங்கி உலகத்தை படைக்க ஆரம்பித்தார். முதலில் சித்தி, புத்தி என்ற பெண்களைப் படைத்தார். அவர்களை விநாயகர் திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு உலகில் மற்ற ஜீவராசிகள் தோன்றின. அந்த சமயத்தில் விஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மன், சேஷன், வருணன் உள்ளிட்ட தேவர்களை துன்புறுத்தினர்.இதுபற்றி, பிரம்மா விஷ்ணுவிடம் முறையிட்டார். விஷ்ணு அந்த அரக்கர்களுடன் ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டார். ஆனாலும் அவர்களை வெல்ல முடியவில்லை. இதன்பிறகு சண்டையை நிறுத்திவிட்டு தனது வீணையை எடுத்து கீதம் இசைத்தார். இந்த கீதத்தில் அனைத்து உயிர்களும் மயங்கின. சிவபெருமானும், இந்த கீதத்தை ரசித்து அதை தனது உலகிலும் ஒலிக்கச் செய்யும் வகையில் விஷ்ணுவை தன் இடத்திற்கு அழைத்து வந்தார்.அங்கு வந்த விஷ்ணு, அரக்கர்களை அழிக்க முடியாததற்கான காரணத்தை சிவனிடம் கேட்டார். ''எந்தச்செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கிய பிறகு துவங்கினால் அதில் வெற்றி கிடைக்கும்,'' என்று சிவன் கூறினார். இதன் பிறகு விஷ்ணு மலைப்பகுதியான 'சித்தடேக்' வந்து நூறு ஆண்டுகள் விநாயகரைக் குறித்து தவம் இருந்தார். விநாயகர் அவர் முன்பு தோன்றி அரக்கர்களை அழிப்பதற்கான ஆற்றலைத் தந்தார். விஷ்ணுவுக்கு சித்தி தந்த தலம் என்பதால் இவ்வூர் 'சித்தடேக்' என்றும், விநாயகருக்கு சித்திவிநாயகர் என்றும் பெயர் ஏற்பட்டது. சித்தடேக் என்பது இங்குள்ள மலையின் பெயர். பின் மகாவிஷ்ணுவே சித்தி விநாயகருக்கு கோயில் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது.மலைக்கோயில்: பீமா நதியை படகில் கடந்து அக்கறையில் உள்ள குன்றின்மீது ஏறினால் சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம். குன்றில் ஏற படிக்கட்டு வசதி உள்ளது. பீமா ஆறு வெகு வேகமாகச் செல்லக்கூடியது. வெள்ளகாலத்தில் கடும் இரைச்சலுடன் பாயும். ஆனால் கோயில் அருகே வரும்போது இந்த ஆறு அமைதியாகிவிடுகிறது. அஷ்ட விநாயகர்களில் சித்தடேக் சித்திவிநாயகர் மட்டுமே வலம்புரி விநாயகராக உள்ளார். மூன்றடி உயரம் உள்ள விநாயகர் சிலையின் நெற்றியில் பச்சைக் கல்லும், தொந்தியில் வைரக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. ஜெயன், விஜயன் என்ற விஷ்ணுவின் வாயில் காவலர்கள் இங்கு காட்சி தருகின்றனர்.தங்கும் வசதி: இங்கு தங்குவதற்கு அறைகள் உண்டு. இருப்பிடம்: புனேயிலிருந்து 78கி.மீ தொலைவில் உள்ளது டான்ட். இங்கிருந்து வேறு பஸ்சில் மாறி, கடாப்சர் வழியாக 18 கி.மீ தூரத்தில் சிராப்பூர். சிராப்பூரில் இருந்து ஒரு கி.மீ நடந்தால் சித்தடேக். கார்களில் சென்றால் பீமாநதிக்கரையை அடைந்து விடலாம். செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமிருக்கும். போன்: 02489-222 760, 222 316.