புறம் சொல்லல் ஆகாது
உங்கள் விரல்கள் சதையால் ஆகியுள்ளன. அதிலுள்ள நகங்கள் சற்று கடுமையாக இருக்கின்றன. ஆனால், யாருக்காவது பித்தளையால் செய்யப்பட்ட நகம் வேண்டுமா என்றால் இதைப் படியுங்கள்.ஒருமுறை, நபிகள் நாயகம் அவர்களை இறைவன் விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த மக்களைக் கடந்து நாயகம் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நகங்கள் பித்தளையால் ஆகியிருந்தன. அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் கீறி கிழித்துக் கொண்டிருந்தனர். வான தூதர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், ''இவர்கள் யார்?'' என அண்ணலார் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ''இந்த மக்கள் இம்மை வாழ்வில் ஒருவருடைய மாமிசத்தை மற்றவர் உண்டு கொண்டிருந்தனர். மக்களின் மானத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,'' என்று பதிலளித்தார்கள். ஒருவருடைய மாமிசத்தை இன்னொருவர் உண்பது, ஒருவர் மற்றொருவரைப் பற்றி புறம் பேசுவதைக் குறிக்கும். புறம் பேசுவதன் மூலம் ஒருவரது கண்ணியமும், மானமும் குலையும். இந்தக் குற்றத்துக்கு இறைவனால் கடுமையான தண்டனை வழங்கப்படும். எனவே, பிறரைப் பற்றிப் புறம் பேசி, பித்தளை நகத்தால் தங்களைத் தாங்களே கீறிக் கொள்ளும் கொடிய தண்டனையைப் பெறுவதில் இருந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டும். பிறரைப் பற்றி புறம்பேசாமல் இருக்க வேண்டுமானால் கெட்டவைகளை பார்க்காமல் இருக்க வேண்டும். ''கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செய்கைகளை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். இறைவனிடமிருந்து சொர்க்கத்தை உங்களுக்கு வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,'' என்கிறார்கள் அண்ணலார்.