குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோர்களின் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும்?
நம் வாழ்க்கையில் பெற்றோர்களின் பங்கு குறித்து லக்ஷ்மி மஞ்சு சத்குருவிடம் கேட்கிறார். நமக்கு 21 வயது ஆகும்வரை, பலவிதங்களில் நம் பெற்றோர்கள் நம் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துகின்றனர், ஆனால் இந்த வயதுக்குப் பிறகு இந்தக் கர்மப் பிணைப்பின் தாக்கம் தொடரக்கூடாது, நம் வாழ்க்கை புதிதாக நடந்தேற வேண்டும்.லக்ஷ்மி மஞ்சு: நமஸ்காரம் சத்குரு! நம் பெற்றோருடன் நமக்கு இருக்கும் உறவு நம் வாழ்க்கையின் போக்கை பாதிக்கிறதா? ஆம் எனில், இதை எப்படி சிறப்பாக வளர்ப்பது?சத்குரு : நமஸ்காரம் லக்ஷ்மி! யோக அறிவியலில், மனித வாழ்க்கையை, 84 வயதுவரை வாழக்கூடிய ஒரு முழு சுழற்சியாக பார்க்கிறோம். சந்திரனின் 1008 சுழற்சிகளுக்கு மேலான காலம் அடங்கிய இந்த வாழ்க்கை சுழற்சியில், முதல் கால்பகுதியில் மட்டுமே நம் பெற்றோர்களின் தாக்கம் நம்மீது சக்தியளவில் செயல்படுகிறது.கர்மப் பிணைப்பின் தாக்கத்தைப் பொறுத்தவரை, 21 வயதுவரை மட்டுமே பெற்றோர்களால் நம் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தமுடியும். அதற்குப்பிறகு அவர்களால் நம் வாழ்க்கையை பாதிக்கமுடியாது, அவர்கள் நமக்கு செய்திருப்பவை அனைத்திற்கும் நன்றியுடன் மட்டுமே நம்மால் வாழமுடியும். முதலில், நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள்தான், மேலும் தங்கள் அன்பாலும் ஈடுபட்டாலும் இன்னும் பல செயல்கள் செய்துள்ளார்கள்.21 வயதுக்குப் பிறகு, ஒருவர் வாழ்க்கையில் அவரது பெற்றோரின் தாக்கம் இருக்கக்கூடாது. ஏனென்றால் ஒருவருடைய வாழ்க்கை புதிதாக இருப்பது முக்கியம், முந்தைய தலைமுறையில் நடந்ததே மீண்டும் நடக்கக்கூடாது. 21 வயதுவரை, பெற்றோருடனான கர்மப் பிணைப்பின் தாக்கம் அனைவரையும் பாதிக்கிறது, ஆனால் அந்த வயதிற்குமேல் அப்படி எதுவும் இல்லை.அதற்குப்பின்பும் மனோரீதியாக, பொருளாதார ரீதியாக, சமுதாயரீதியாக தங்கள் பெற்றோரை சார்ந்து இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் இந்த கர்மப் பிணைப்பு 21 வயதுடன் முறிகிறது. 21 வயதிற்கு மேல் பெற்றோர்கள் நமக்கு ஊட்டமளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. அதற்குப்பிறகு இது அன்பு மற்றும் நன்றியுணர்வு நிறைந்த உறவின் பிணைப்பு - இது முடிவின்றி தொடரவல்லது.