அளவுக்கு மீறி ஆசைப்படலாமா?
'உசுப்பேற்றி உசுப்பேற்றியே, உடம்பை ரணகளமாக்கி விட்டனர்...' என புலம்புகிறார், டில்லி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பர்வேஷ் வர்மா. டில்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. புதுடில்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மாவுக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என, பா.ஜ.,வினரிடையே பேச்சு இருந்தது.பர்வேஷ் வர்மாவும், தனக்கு எப்படியும் முதல்வர் பதவி கிடைக்கும் என்ற சந்தோஷத்தில், கொஞ்சம் ஓவராகவே, 'சவுண்டு' விட்டார். ஆம் ஆத்மி கட்சியினரை கடுமையாக தாக்கிப் பேசினார்.ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை தான், பிரதமர் மோடி எடுப்பார் என்பது, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு நன்றாக தெரியும். பர்வேஷ் வர்மா விஷயத்திலும் இதுதான் நடந்தது.அரசியலில் அதிகம் அறிமுகம் இல்லாதவரும், முதல் முறை எம்.எல்.ஏ., ஆனவருமான ரேகா குப்தாவை முதல்வராக அறிவித்தது, பா.ஜ., மேலிடம். முதல்வர் பதவியை பெரிதும் எதிர்பார்த்த பர்வேஷ் வர்மாவுக்கு, அமைச்சர் பதவி தான் கிடைத்தது.இதனால் விரக்தியில் உள்ள பர்வேஷ் வர்மா, 'சுற்றியிருந்து ஜால்ரா அடித்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அளவுக்கு மீறி ஆசைப்பட்டது நம் தப்பு தான்...' என, புலம்புகிறார்.