மறுபடியும் சிறையா?
-'இன்னும் சில மாதங்களுக்கு எந்த சத்தமும் போடாமல் அமைதியாக இருக்க வேண்டும்...' என்ற முடிவுடன் உள்ளார், பாரத் ராஷ்ட்ர சமிதிகட்சியின் எம்.எல்.சி., கவிதா. இவர், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு, தேசிய அரசியலில் குதித்தார், சந்திரசேகர ராவ். பா.ஜ.,வையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார். நாடு முழுதும்சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து, மூன்றாவது அணி குறித்தெல்லாம் பேச்சு நடத்தினார். ஆனால், தெலுங்கானா சட்டசபை தேர்தலிலேயேஅவரால் வெற்றி பெற முடிய வில்லை; காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தார். அடுத்து நடந்த லோக்சபா தேர்தலிலும் அவரதுகட்சி மண்ணை கவ்வியது. இதற்கிடையே, டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சந்திரசேகர ராவின்மகள் கவிதா வசமாக சிக்கினார். ஐந்து மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவருக்கு ஜாமின் கிடைத்து வெளியில் வந்தார். வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்ட அவர், 'ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டு, நாக்கு மரத்து போய் விட்டது. ஜெயில் வாழ்க்கையை நினைத்தாலே மனது பதறுகிறது. 'இன்னும் சில மாதங்களுக்கு எந்த அரசியலும்பேசாமல் அமைதியாக இருங்கள். இல்லையெனில், மறுபடியும் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்...' என, தன் தந்தையிடம் புலம்பியுள்ளார்.