உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / புதுமைக்கு வாய்ப்பே இல்லை!

புதுமைக்கு வாய்ப்பே இல்லை!

'புதிதாக என்ன முயற்சி செய்தாலும், அதில் ஏதாவது சந்தேகத்தை கிளப்பி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியினருக்கு வேலையாக போய்விட்டது...' என புலம்புகிறார், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நர லோகேஷ்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் தான் நர லோகேஷ். இளைஞர் என்பதால், புதுமையாக எதையாவது செய்வார் என நம்பி, தன் மகனிடம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை ஒப்படைத்துள்ளார், சந்திரபாபு நாயுடு. இதையடுத்து, களத்தில் இறங்கிய நர லோகேஷ், தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசு சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது உட்பட 161 சேவைகளை, 'வாட்ஸாப்' வாயிலாகவே மக்கள் பெறும் வசதியை நர லோகேஷ் அறிமுகப்படுத்தினார்.'இதன் வாயிலாக, மக்கள் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. லஞ்சம் கொடுக்க தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சேவைகளை பெறலாம்...' என்றார், நர லோகேஷ். எதிர்க்கட்சியினரோ, 'வாட்ஸாப்பில் சேவை பெறுவது எல்லாம் சரி தான். ஆனால், நம் தனிப்பட்ட தகவல்கள் பொது வெளியில் கசியும் அபாயம் உள்ளதே; இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியுமா...' என, கொளுத்தி போட்டனர். அதிர்ந்து போன நர லோகேஷ், 'இப்படிப்பட்ட எதிர்க்கட்சியினர் இருக்கும் வரை புதுமைக்கு வாய்ப்பே இல்லை...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி