ஆயிரம் அவதாரம்!
'சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் கூட இப்படிப்பட்ட, 'பல்டி'யை பார்க்க முடியாது...' என, உத்தர பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி பெண் எம்.பி., இக்ரா ஹசன் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள மக்கள். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கைரானா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர், இக்ரா ஹசன்; வயது,30. தற்போது லோக்சபாவில் உள்ள இளம் பெண் எம்.பி.,க்களில் இவரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன், சாலையோரங்களில் தொழுகை நடத்துவதற்கு உ.பி., அரசு தடை விதித்தது; இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி, சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படு வதாகவும் விமர்சித்தார் இக்ரா. தற்போது வட மாநிலங்களில், 'கன்வர்' யாத்திரை நடக்கிறது. பக்தர்கள், தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வதற்காக, கங்கை நதியில் புனித நீர் எடுத்து வருவது தான், 'கன்வர்' யாத்திரை. சமீபத்தில், இந்த யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களுக்கு தண்ணீர், உணவு பொட்டலங்களை வினியோகித்தார், இக்ரா. அப்போது அவர் காவி நிற சால்வையும் அணிந்திருந்தார். 'சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இக்ரா, காவி சால்வை அணிந்து பக்தர்களுக்கு உணவு வழங்குகிறாரே...' என, பலரும் ஆச்சரியப்பட்டனர். உ.பி., மக்களோ, 'எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஓட்டு போட்டால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதற்காக, அரசியல்வாதிகள் ஆயிரம் அவதாரங்கள் எடுப்பர். இக்ரா ஹசனும் அப்படித்தான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.