உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வலிக்காத மாதிரி நடிப்பு!

வலிக்காத மாதிரி நடிப்பு!

'முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே உள்ள மோதலை மக்களிடம் இருந்து திசை திருப்ப, காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கிறது...' என, கர்நாடகாவில் உள்ள பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கின்றனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை பெற, சிவகுமார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். சமீபத்தில், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், சித்தராமையாவும், சிவகுமாரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, சமீபத்தில் இருவரையும் டில்லிக்கு அழைத்து அறிவுரை வழங்கிய காங்., மேலிடம், 'பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் சண்டையால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது...' என, கண்டித்ததாக தகவல்கள் கசிந்தன. ஆனால், டில்லியில் இருந்து திரும்பிய சித்தராமையாவும், சிவகுமாரும், 'கர்நாடகாவில், 90 நாட்களுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டும் என, மேலிட தலைவர்கள் அறிவுறுத்தினர்; அதற்காகவே டில்லி சென்றோம்...' என, தெரிவித்தனர். இதை கேள்விப்பட்ட எதிர்க்கட்சியினர், 'பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா...? மேலிடத்திடம் குட்டு வாங்கிட்டு, இங்க வந்து வலிக்காத மாதிரியே நடிக்கிறாங்களே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !