தாக்குப்பிடிக்க முடியுமா?
'முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டிக்கு ஆள் வந்து விட்டதே...' என, எரிச்சலுடன் கூறுகிறார், கோவா முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான பிரமோத் சாவந்த்.சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற சிறிய மாநிலமான கோவாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அதிகம் வெளியில் தெரிவது இல்லை. ஆனால், தற்போது அங்கு முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், அவரது சக அமைச்சர் விஸ்வஜித் ரானேவுக்கும் நடக்கும் மோதல், தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.விஸ்வஜித் ரானே, கோவாவின் நகர்ப்புற திட்டமிடல் துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு முதல்வர் பதவி மீது ஏற்கனவே ஒரு கண் உண்டு; பதவியை கைப்பற்றுவதற்கு நேரம் பார்த்து வருகிறார்.இதையறிந்த முதல்வர் பிரமோத் சாவந்த், விஸ்வஜித் ரானேயின் செல்வாக்கை குறைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில், விஸ்வஜித் ரானேயின் துறைக்கு உட்பட்ட சில பணியிடங்களுக்கு, தானே அதிகாரிகளை நியமித்தார், பிரமோத் சாவந்த். இதனால் கடுப்பான விஸ்வஜித் ரானே, 'அமைச்சர் பதவியில், 'டம்மி' யாக அமர எனக்கு விருப்பம் இல்லை. எனக்கென கட்சியில் கணிசமான, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உண்டு. அதிரடி முடிவு எடுத்தால், ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்...' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். இதனால், முதல்வர் பிரமோத் சாவந்தோ, 'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதுவரை முதல்வர் பதவியில் தாக்குப் பிடிக்க முடியுமா...?' என, புலம்புகிறார்.