பொறுப்பேற்க முடியுமா?
'இளைய தலைமுறையினர் மத்தியில் அரசியல்வாதியாக நீடிப்பது, ரொம்ப சிரமமான காரியம் தான்...' என புலம்புகிறார், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., பெண் எம்.பி., அபராஜிதா. 'நீட்' வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக, கடந்த மாதம் டில்லியில் நடந்த போராட்டத்தின் முடிவில், மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான்; இவரும், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வரவேற்று, அபராஜிதாவின் மகள் அர்ச்சிதா, சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அர்ச்சிதாவின் இந்த நடவடிக்கை, ஒடிஷா மாநில பா.ஜ.,வினரிடையே கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 'அபராஜிதாவும், தர்மேந்திர பிரதானும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கூட. அப்படியிருக்கும் போது, தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை, அபராஜிதாவின் மகள் வரவேற்றதை ஏற்க முடியாது. அபராஜிதா, தன் மகளை கண்டிக்காதது ஏன்...?' என, பா.ஜ.,வினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். அபராஜிதாவோ, 'நான், தர்மேந்திர பிரதான் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன். என் மகள், இப்போது தான் கல்லுாரி படிப்பை முடித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் கருத்துக்களுக்கு, நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? இன்றைய தலைமுறையினர், பெற்றோர் சொல்வதை கேட்கவா செய்கின்றனர்...?' என புலம்புகிறார்.