கட்சிக்கு அவப்பெயர்!
'கட்சியின் பெயரை கெடுப்பதற்காகவே இப்படி ஒரு கும்பல் செயல்படுகிறது...' என, முணுமுணுக்கின்றனர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள். 'நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், அவசரப்பட்டு எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்...' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடிக்கடி, தங்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், 2016ல் பாகிஸ்தான் மீது நம் ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல், கடந்தாண்டு நடந்த ஆப்பரேஷன் சிந்துார் எனப்படும், பாகிஸ்தான் மீதான தாக்குதல் போன்ற விஷயங்களில், ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு, காங்கிரசுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், சமீபத்தில் டில்லியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு நடந்தது. இந்த அரங்கிற்குள் நுழைந்த, காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்த சிலர், தாங்கள் அணிந்திருந்த, 'டி - ஷர்ட்'களை கழற்றி, கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பி ரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தையும் விமர்சித்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயல், நாட்டுக்கே அவமதிப்பை ஏற்படுத்தி விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களோ, 'வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டனர். இவர்களை ராகுல் ஊக்குவிக்கிறாரா என்ன...?' என்று, கவலைப்படுகின்றனர்.