உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இவருக்கா இந்த நிலை?

இவருக்கா இந்த நிலை?

'பாவம், இவரை இப்படி நடுத்தெருவில் நிறுத்தி விட்டனரே...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.எல்.சி., கவிதா பற்றி பரிதாபத்துடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள். தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார். 2023ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் இவரது கட்சி படுதோல்வி அடைந்தது. அவரது மகள் கவிதா, டில்லி மதுபான கொள்கை ஊழலில் சிக்கி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் போராட்டத்துக்கு பின், ஜாமினில் வெளியில் வந்தார். சமீபகாலமாக கவிதா, தன் தந்தை மீதும், தன் சகோதரரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை, பா.ஜ.,வுடன் இணைக்க முயற்சிப்பதாக அவர் கூறியது, அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தெலுங்கானாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 42 சதவீத இடஒதுக்கீடு தர வலியுறுத்தி, ஹைதராபாதில் கவிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதில், கட்சி நிர்வாகிகள் யாருமே பங்கேற்கவில்லை. உண்ணாவிரத பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது. பந்தலில் தனியாக அமர்ந்திருந்த கவிதாவை பார்த்து, 'இவருக்கா இந்த நிலை...' என, கட்சியினர் முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை