உள்ளூர் செய்திகள்

நொண்டி சாக்கு!

'தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் ராகுலுக்கு இல்லை...' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். பிரதமர் மோடியை பற்றி அவதுாறாக பேசியது, சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரை பற்றி அவதுாறாக பேசியது என, பல வழக்குகளில் சிக்கியுள்ளார் ராகுல். இவற்றில், வீர் சாவர்க்கர் பற்றி அவதுாறாக பேசியது தொடர்பாக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ராகுலுக்கு எதிரான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்தாண்டு நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த ராகுலுக்கு, தோல்வி தான் கிடைத்தது. இந்த கோபத்தில், தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.'தேர்தலுக்கு முந்தைய ஐந்து மாதங்களில் மட்டும் மஹாராஷ்டிராவில், 41 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; இது மிகப்பெரிய மோசடி. தேர்தல் ஆணையம், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது...' என, குற்றஞ்சாட்டியுள்ளார் ராகுல். இதனால் அதிருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர ஆலோசித்து வருகின்றனர். பா.ஜ.,வினரோ, 'தேர்தல் தோல்விக்கு நொண்டி சாக்கு கூறுவதே ராகுலுக்கு வேலையாகி விட்டது...' என, கிண்டலடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !