எதிர்க்கட்சியினர் சதி?
'நல்லதுக்கே காலம் இல்லை... நல்ல விஷயங்களை பேசினால், ஏன் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார், ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மதன் திலாவர். ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மதன் திலாவர் அறிவித்த ஒரு திட்டம் தான், அவருக்கு கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அதாவது, 'கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, மாநிலம் முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரே மாதிரியான சீருடை அணிய நடவடிக்கை எடுக்கப்படும்...' என, மதன் திலாவர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, தனியார் பள்ளி நிர்வாகங்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'மாநிலத்தில் உள்ள பல அரசு பள்ளிகளுக்கு போதிய கட்டடங்கள் இல்லை. மரத்தடிகளில் தான் வகுப்புகள் நடக்கின்றன. போதிய கழிப்பறை வசதியும் இல்லை. 'இந்த பிரச்னைகளை சரிசெய்யாமல், சீருடை விஷயத்தில் அமைச்சர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது. ஒரே மாதிரி சீருடை அணிந்தால், இந்த பிரச்னைகள் சரியாகி விடுமா...?' என, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், தனியார் பள்ளி நிர்வாகத்தினர். 'சீருடை திட்டத்துக்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசுகின்றனர். இதில், எதிர்க்கட்சியினரின் சதி உள்ளது...' என புலம்புகிறார், மதன் திலாவர்.