உள்ளூர் செய்திகள்

 பாராட்டு மழை!

'இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை...' என, மகிழ்ச்சியுடன் கூறுகிறார், ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா. இம்மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்; ஜம்முவில் ஹிந்துக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, கோடை காலத்தில் காஷ்மீரும், குளிர் காலத்தில் ஜம்முவும் தலைநகராகச் செயல்படுவது வழக்கம். கடந்த 150 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், கோப்புகள் மற்றும் ஊழியர்களை இடம் மாற்றுவதில் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில், 2021ல், 'காஷ்மீர் மட்டுமே முழு நேர தலைநகராக செயல்படும்' என, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்திருந்தார். தற்போது, முதல்வர் ஒமர் அப்துல்லா, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளார். இதன்படி, இம்மாத துவக்கத்தில் இருந்து ஜம்மு மீண்டும் தலைநகராகச் செயல்படுகிறது. இதற்காக, ஜம்முவில் உள்ள வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், ஒமர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 'சீதோஷ்ண நிலை ஒரு காரணமாக இருந்தாலும், ஹிந்து, முஸ்லிம் மக்களை சமமாக நடத்தும் விதமாகவே, தலைநகர் மாற்றம் நடைமுறை இருந்து வந்தது. தற்போது ஜம்முவில் தலைநகர் செயல்படத் துவங்கியுள்ளதால், இங்கு வசிக்கும் ஹிந்துக்கள் எனக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்...' என்கிறார், ஒமர் அப்துல்லா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !