சோதனை மேல் சோதனை!
'அரசியலில் ஏற்பட்ட தோல்வி, குடும்பம் வரை எதிரொலிக்கத் துவங்கி விட்டதே...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த தேர்தலில், ஆளுங்கட்சி கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, லாலுவின் குடும்பத்துக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், தன் தந்தை மீதும், தம்பி தேஜஸ்வி மீதும், அவர் கடும் கோபத்தில் உள்ளார். தற்போது லாலுவின் மகள் ரோகிணியும், அரசியலில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 'தம்பி தேஜஸ்வி யாதவ் என்னை போட்டியாளராக கருதுகிறார். அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். முடிந்தால், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெற்று, தேஜஸ்வி முதல்வராகட்டும்...' என, ரோகிணி தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவோ, 'சோதனை மேல் சோதனையாக வருகிறதே...' என, புலம்புகிறார்.