தொடரும் வேட்டை!
'கட்சியில் உள்ள ஒரு நிர்வாகியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், டில்லி முன்னாள் முதல் வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தார். அப்போது, மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக கூறி, அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப் பட்டனர்; பின், ஜாமினில் வந்தனர். தற்போது, டில்லியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளில் நடந்த ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கலக்கம் அடைந்துள்ள கெஜ்ரிவால், 'ஆட்சியும் போய், பதவியும் பறிபோய் விட்டது. ஆனாலும், எங்களை துரத்தி துரத்தி வேட்டையாடுகிறதே பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு...' என, கதறுகிறார்.