களம் இறங்கிய பிரதமர்!
'பிரதமர், இதற்கு முன் இவ்வளவு ஆவேசமாக பேசி பார்த்தது இல்லையே...' என, சக பா.ஜ., தலைவர்களே ஆச்சரியப்படுகின்றனர். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, தொடர்ச்சியாக, 10 ஆண்டுகள் ஆம் ஆத்மி தான் ஆளுங்கட்சியாக உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் அங்கு நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் டில்லியில், பா.ஜ., அபார வெற்றி பெற்றாலும், சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வி வரலாறுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முடிவு செய்து உள்ளார், பிரதமர் மோடி.இதற்காக இப்போதே களத்தில் இறங்கி விட்டார், சமீபத்தில் இங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அவர், 'தலைநகர் டில்லி, கடந்த, 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் பேரழிவை சந்தித்து வருகிறது. ஏற்கனவே இங்கு முதல்வராக இருந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை சாதாரண மக்களின் பிரதிநிதி என கூறுகிறார். ஆனால், தான் குடியிருப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை உருவாக்கி உள்ளார்.'ஏழைகளின் தோழர் என இரட்டை வேடம் போடுவோரை டில்லி மக்கள் வீழ்த்த வேண்டும்...' என, ஆவேசமாக பேசினார்.இதை கேட்ட பா.ஜ., தலைவர்கள், 'டில்லியில் இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என, பிரதமர் முடிவு செய்து விட்டார். அதற்காகத் தான், வார்த்தைகளில் அனலை கக்குகிறார். இனி, தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கும்...' என்கின்றனர்.