உள்ளூர் செய்திகள்

வாரிசு இல்லையே!

'இவர்களுக்குள் நடக்கும் சண்டையில், கட்சி காணாமல் போய் விடும் போலிருக்கிறதே...' என கவலைப்படுகின்றனர், பிஜு ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள். ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வர் பதவியை அலங்கரித்தவர் தான், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், தன் கட்சி வெற்றி பெறும், மீண்டும் முதல்வராகலாம் என நினைத்திருந்தார், நவீன் பட்நாயக். ஆனால், பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டார். தற்போது நவீன் பட்நாயக்கிற்கு, 78 வயதாகிறது. உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சை பெறுவதற்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு, பிஜு ஜனதா தளம் கட்சியினரிடையே கடும் மோதல் நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன், கட்சியின் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றிய நவீன் பட்நாயக், பொறுப்புகளை கவனித்துக் கொள்வதற்காக, மூத்த தலைவர்கள், 10 பேர் அடங்கிய குழுவை அமைத்தார். இவர்கள், 10 பேருக்குமே தலைவர் பதவி மீது ஆசை உள்ளது. இதனால், அவர்களுக்குள் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதைப் பார்த்த பிஜு ஜனதா தளம் தொண்டர்கள், 'நவீன் பட்நாயக்கிற்கு திருமணம் முடிந்து, வாரிசு இருந்திருந்தால் இந்த பிரச்னையே ஏற்பட்டிருக்காது...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி