இவருக்கு, தங்கமான ராசி!
'இன்னும், ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் இப்படி சர்ச்சையை கிளப்புகின்றனரே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், கேரள மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா, கிலோ கணக்கில் தங்கம் வழங்கியிருந்தார். அதை வைத்து, கோவிலின் மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர், கருவறை கதவு மற்றும் துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கக் கவசங்கள் செய்து அணிவிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன், துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள் பராமரிப்புக்காக கழற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், துவாரபாலகர் சிலைகளில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம், அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக போராட்டத்தை துவக்கி உள்ளன. இது, முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 'கடந்த தேர்தலின் போது, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், சம்பந்தம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்தினர். இந்த தேர்தலில், சபரிமலை தங்கம் விவகாரத்தில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர்...' என, பினராயி விஜயன் புலம்புகிறார். கேரள மக்களோ, 'தங்கத்துக்கும், பினராயி விஜயனுக்கும் அப்படி என்ன ராசியோ...' என, கிண்டலடிக்கின்றனர்.