உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / எங்களுக்கும் காலம் வரும்!

எங்களுக்கும் காலம் வரும்!

'இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்காக அரசியலில் இருந்து ஒரேயடியாக காணாமல் போய் விடுவோமா; மீண்டும் வெற்றி பெற மாட்டோமா...' என, எரிச்சலுடன் கூறுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ். தெலுங்கானா மாநில அரசி யலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சந்திரசேகர ராவ், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார். யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வரானார். இதையடுத்து, சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் மீது, கார் பந்தயம் ஏற்பாடு செய்ததில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவானது. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்பிருப்பதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, அவரை கைதும் செய்தது.இதனால் பீதியடைந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி நிர்வாகிகள், ஒவ்வொருவராக வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். பெயர் சொல்லும் அளவுக்கு செல்வாக்கான தலைவர்கள் யாரும் இப்போது அந்த கட்சியில் இல்லை.கட்சி நிர்வாகிகளின் இந்த ஓட்டம், சந்திரசேகர ராவை ரொம்பவே கலவரப்படுத்தியுள்ளது. 'எல்லா கட்சிகளும் தான் தேர்தல்களில் தோல்வியை சந்திக்கின்றன. ஒரு முறை தோல்வியை சந்தித்த கட்சி, மறுபடியும் ஆட்சியை பிடித்தது இல்லையா? எங்களுக்கும் காலம் வரும். கட்சியை விட்டு ஓடியவர்கள் திரும்ப வருவர்...' என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார், சந்திரசேகர ராவ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை