கம்பி எண்ண வேண்டுமா?
'பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது...' என கவலைப்படுகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.ஆறு மாதங்களுக்கு முன், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடந்தது. லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன், சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்து, ஆட்சியை, தற்போதைய முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவிடம் பறிகொடுத்தார், ஜெகன்மோகன் ரெட்டி.இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ஜெகன்மோகன் மீதான பழைய வழக்குகளை எல்லாம் துாசு தட்டத் துவங்கினார், சந்திரபாபு நாயுடு. அடுத்ததாக, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு தொடர்பான திட்டங்களுக்காக, தொழிலதிபர் அதானியின் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம், தற்போது பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதானி நிறுவனத்திடமிருந்து, ஜெகன்மோகன் லஞ்சம் பெற்றதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களை தெரிவிக்காமல், அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக, அங்குள்ள பங்குச்சந்தை வாரியம், அதானிக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ளது. இதில், ஜெகனும் வசமாக சிக்குவார் என பரபரப்பாக பேசப்படுகிறது.'உள்ளூரில் தான் வழக்கு போட்டு இம்சித்தனர் என்றால், இப்போது அமெரிக்கா வரையிலும் வழக்கு போடுகின்றனரே. வெளிநாட்டு சிறையில் கம்பி எண்ண வேண்டியிருக்குமோ...' என எண்ணி புலம்புகிறார், ஜெகன்மோகன் ரெட்டி.