பொருளாதாரத்தில் தொலைநோக்கு சிந்தனை கொண்டது தினமலர்
தமிழக பத்திரிகை துறை, மிக நீண்ட வரலாறு கொண்டது. சுதந்திர போராட்டத்தின் போது, அனைத்து மொழி பத்திரிகைகளுக்கும் முன்னோடியாக இருந்தவை தமிழ் பத்திரிகைகள். நம் அனைவராலும் கொண்டாடப்படுகிற மகாகவி பாரதி ஒரு தமிழ் பத்திரிகையாளர். அது மட்டுமல்ல, அவர் தமிழ் இதழியலின் முதல் கார்டூனீஸ்டும் ஆவார்! வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில், ப்ரெஸ் எமெர்ஜெண்சி ஆக்ட் மூலமாக இந்திய தேசம் முழுவதும் இரண்டு பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. அதில் ஒன்று சுதந்திர போராட்ட தியாகி அர்தநாரீச வர்மா அவர்கள் நடத்திய 'ஷத்திரியன்' பத்திரிகை. இப்படியான ஒரு சீரிய வரலாறு கொண்ட தமிழ் பத்திரிகை துறையின் வரலாற்று பெருமையை ஒரே ஒரு நாளிதழ் மட்டும் இன்றளவும் காப்பாற்றி வருகிறது என்று சொன்னால், அந்த நாளிதழ் 'தினமலர்'! இதில் மிகையோ, புகழ்ச்சியோ கிஞ்சிற்றும் இல்லை. தேசியம் என்கிற உன்னதமான சித்தாந்தத்தில் துளியும் வழுவாமல் சுதந்திர போராட்டகாலத்தில் தமிழ் பத்திரிகை துறை எப்படி இருந்ததோ, அப்படியே இன்றளவும் தொடர்கிற பத்திரிகையாக 'தினமலர்' இருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் மிக பெருமையான விஷயம். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை மட்டும் செய்தியாக்காமல், மக்களுக்கு எது நன்மை பயக்குமோ, அதை முதலில் செய்தியாக்குகிற தன்மை தினமலரின் சிறப்பம்சமாக இருக்கிறது. எனக்கும் தினமலருக்குமான உறவு ஆத்மார்த்தமானது. பள்ளிப் பருவத்திலிருந்தே சிறுவர்மலர் படித்து வளர்ந்த ஒரு தலைமுறையை சேர்ந்தவன் நான். முதன்முதலாக நான் எழுதிய கடிதம் சிறுவர் மலரில் பிரசுரமானது. அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த கடிதம் பிரசுரமானதை எண்ணி என்னுடைய அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்டர்கள். பின்னாளில் நான் பொதுவாழ்வில் பயணிக்க துவங்கிய பிறகு, என்னை முதன்முதலில் கார்ட்டூனாக வரைந்ததும் இதே 'தினமலர்' தான். ஒரு விவகாரத்தில், நானும் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாசும் கத்தி சண்டை போடுவதாக 'தினமலர்' கார்ட்டூன் வெளியிட்டது. அந்த கார்ட்டூனை, என் அம்மாவிடம் காட்டும்போது அவர் சிரித்துகொண்டே அதை பத்திரப்படுத்தினார். ஒரு முறை, 'கடந்த 1939ல் மூதறிஞர் ராஜாஜி அவர்களால் தான், தமிழ் மண்ணில் ஆலய நுழைவு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அப்போது எதிர்த்தது ஈ.வே.ராமசாமி' என்று ஒரு கருத்தை நான் வெளியிட்டபோது, அந்த கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் என்னிடமிருந்து ஒரு முழு பேட்டியை வெளியிட்டது 'தினமலர்'. அதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் ஆளுமைகளும் என்னுடைய கருத்தை ஆதரித்து, தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டார்கள். தமிழ் சமூகத்தில் அதுவரை பீடித்திருந்த பல்வேறு மாய தோற்றங்களை உடைப்பதற்கு, 'தினமலர்' வெளியிட்ட அந்த பேட்டி மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. பண்ருட்டி பகுதி முந்திரி விவசாயிகளின் லாபத்தை மும்மடங்காக பெருக்கும் நோக்கில், வீணாகும் முந்திரி பழத்திலிருந்து பயோ எத்தனால் தயாரிக்க வேண்டும் என்கிற ஒரு முன்னெடுப்பை தொடங்கினேன். அதற்காக, மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் பேருதவியோடு ஆராச்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்து, இப்போது, முந்திரி பழம் பயோ எத்தனால் தயாரிக்கக்கூடிய விவசாய மூல பொருட்களின் பட்டியலில் சேர இருக்கிறது. இந்த முயற்சி ஆரம்பித்தபோதே, 'தினமலர்' அது தொடர்பாக ஒரு விரிவான தொலைநோக்கு கட்டுரையை வெளியிட்டது. இதுபோன்ற செய்திகள், எல்லோரும் விரும்புகின்றனவை கிடையாது. ஆனால், விரும்பப்பட வேண்டிய செய்தி. இதைத்தான் தினமலரின் சிறப்பம்சமாக நான் கருதுகிறேன். மக்கள் எதை படிக்கிறார்களோ, அதை மட்டுமே கொடுக்காமல், மக்கள் எதை படிக்க வேண்டுமோ அதையும் கொடுக்கிறது 'தினமலர்'. குறிப்பாக, பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட எழுத்தாடலை 'தினமலர்' தருகிறது. அதே போல, முன்னாள் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.வி.ரமேஷின் முந்திரி ஆலை கொலை வழக்கிலும் நான் சி.பி.ஐ., விசாரணை கோரிவந்த போது; அதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு விரிவான கட்டுரையாக 'தினமலர்' பிரசுரித்தது. அந்த கட்டுரை பிரசுரமான 48 மணி நேரத்திற்குள்ளாக, சாதாரண வழக்காக பதியப்பட்ட அந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த ரமேஷை குற்றவாளியாக சேர்த்து, போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான துணிச்சலும் தீவிரமும், தமிழகத்தில் 'தினமலர்' நாளிதழுக்கு மட்டுமே இருப்பதை பார்க்கிறேன். 'தினமலர்' நாளிதழ் நிர்வாகம், எப்படி எல்லா விஷயங்களிலும் சமூக நோக்கத்தோடு துணிந்து செயல்படுகிறதோ, அதே நோக்கத்திலேயே அங்கிருக்கும் ஊழியர்களும் செயல்படுகின்றனர். அதனால் தான், பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு செய்தியிலும் உயிரோட்டமும் உண்மையும் இருக்கிறது. 'தினமலர்' நாளிதழ் மேலும் பல மடங்கு பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து, அதன் 100ம் ஆண்டு விழாவிலும், அதனுடனான மேலும் சில நினைவுகளோடு, இதே போன்று கடிதம் எழுத வேண்டும் என விரும்புகிறேன். - திரு அ. அஷ்வத்தாமன், மாநில செயலர், தமிழக பா.ஜ.,