மேலும் செய்திகள்
மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது 'தினமலர்'
14-Oct-2025
நாளிதழ் என்பதும் அரசியல் கட்சியை போல ஓர் இயக்கம் தான். நாட்டில் ஏற்படும் நெருக்கடியை எதிர்கொள்ளவும், போராட்ட களத்திலும் தான் ஓர் அரசியல் கட்சி பிறக்கிறது. மஹாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்ளவே, 'பாரதிய ஜனசங்கம்' என்ற அரசியல் கட்சி பிறந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்ட களத்தில் மக்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பிறந்தது தான் 'தினமலர்'.இந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அனைத்து அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களிலும் 'தினமலர்' பங்களிப்பு மிக பெரிதாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய அரசியல் மாற்றம் அரை நூற்றாண்டை கடந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. தி.மு.க.,வில் இருந்து வந்தாலும், தேசியத்தின் பக்கம் நின்ற எம்.ஜி.ஆரின் இந்த அரசியல் வளர்ச்சியில் தினமலருக்கு பெரும் பங்குண்டு.நாத்திகம், திராவிடம் என்ற பெயரில் தேசியத்துக்கு எதிரான சக்திகள், தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய போது, 'தினமலர்' துணிச்சலுடன் தேசியத்தின் பக்கம் நின்றது. தேசிய கருத்துக்களை அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக நடுத்தர மக்களிடம் கொண்டு சேர்த்தது. தேசியமும், துணிச்சலும் தினமலரின் இரு கண்கள். அதனால்தான் தேசியத்தை உயிராய் நேசிக்கும் என்னைப் போன்றவர்களால் தினமலரை படிக்காமல் ஒருநாளும் இருக்க முடிவதில்லை.ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும், சமூக விரோதிகளை மக்களிடம் அம்பலப்படுத்துவதிலும் 'தினமலர்' காட்டும் துணிச்சல், இதழியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். பொதுவாக தமிழக ஊடகங்களில் திராவிட கட்சிகளின் தாக்கம் அதிகம். திராவிடத்தை எதிர்ப்பவர்களுக்கு, குறிப்பாக தேசிய சக்திகளுக்கு, ஊடகங்களில் சம வாய்ப்பு என்பது இருக்காது. ஆனால், 'தினமலர்' அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பை வழங்கி வருகிறது. தேசியத்தின் பக்கம் இருப்பதால், தினமலரை பா.ஜ., சார்பான நாளிதழ் என்று பலர் விமர்சனம் செய்வதுண்டு. மற்ற கட்சிகளுக்கு எப்படி வாய்ப்பு தருகிறதோ, அதுபோலவே பா.ஜ.,வுக்கும் 'தினமலர்' வாய்ப்பு தருகிறது. அதே நேரத்தில் பா.ஜ., மீது மிக மிக அதிகமான விமர்சனங்களை வைப்பதும் தினமலர் தான். செய்தியை செய்தியாக பார்க்கும் 'தினமலர்' ஆசிரியர்களின் நடுநிலைக்கு இதைவிட வேறு சான்று இருக்க முடியாது. இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு மிக மிக பெரியது. கொங்கு மண்டலம் இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி இல்லை. கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 'தினமலர்' நாளிதழ் தந்த ஆக்கமும், ஊக்கமும் மிக மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதுபோல, 'தினமலர்' நம் அன்னை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எப்போதும் பெரும் தொண்டாற்றி வருகிறது. 40 ஆண்டுகள், 'தினமலர்' ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது நாணயவியல் ஆராய்ச்சி மூலம் தமிழின் தொன்மை, தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய பெரும் பங்களித்துள்ளார். தமிழ் எழுத்து சீர்மை முறையை வெகுஜன நாளிதழில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இப்போதும் கூட 'பட்டம்' மாணவர் பதிப்பு மூலம் பள்ளிக்கூட மாணவர்களிடையே நம் அன்னைத் தமிழ் மொழியை வளர்த்து வருகிறது 'தினமலர்'. தமிழ்நாட்டில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் பற்றி மிக மிக விளக்கமாக செய்திகள் வெளியிடுவதும் தினமலர் தான்.பவளவிழா காணும் இந்த தருணத்தில், 'தினமலர்' நிறுவனர் திரு டி.வி.ராமசுப்பையர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். அவரது தொலைநோக்குப் பார்வை, தீர்க்கமான சிந்தனை, தேசியப் பார்வை, கடின உழைப்பு ஆகிவை தான் 'தினமலர்' வளர்ச்சிக்கு பெரும் காரணம். இந்தப் பண்புகளை தனது வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அதனால் தான், வெற்றிகரமாக 75 ஆண்டுகளை தொட்டு, பவள விழா காண்கிறது தினமலர். 'தினமலர்' பல நூற்றாண்டுகளை கண்டு, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தேசியத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 'தினமலர்' வாசகர் என்பதில் பெருமை கொள்கிறேன்.இப்படிக்கு,வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர்
14-Oct-2025