உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / தினமலருக்கு சல்யூட்

தினமலருக்கு சல்யூட்

''ஆயுதம் செய்வோம்... நல்ல காகிதம் செய்வோம்...'' என்ற மகாகவி பாரதியின் வார்த்தைக்கு ஏற்ப, காகிதத்தையே ஆயுதமாக்கிய பெருமை, நம் தினமலருக்குத் தான் உண்டு. நான் மதுரை தியாகராசர் கல்லுாரியில் படிக்கும் காலத்தில்தான், எம்.ஜி.ஆர்., தனது கட்சியை துவக்கினார். அப்போது, அவரது அழகான புகைப்படங்களும், பரபரப்பான அரசியல் செய்திகளும், மக்களை வந்து உடனுக்குடன் அடைந்தது என்றால், அதற்கு காரணம், எனக்கு தெரிந்து 'தினமலர்' தான் என்று உறுதியாய் சொல்வேன். இதேபோல், ஜெயலலிதா சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்து சாதித்த செயல்பாடுகளையும், அப்போது அங்கு நடந்த நிகழ்வுகளையும், பரபரப்பாக, சுடச்சுட தந்தது 'தினமலர்' தான். அதில் உண்மையும் இருந்தது. பத்திரிகையின் அச்சமில்லாத தைரியமும் இருந்தது. அரசியல் தவிர, ஆன்மிகம், அறிவியல் என, அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்தது, தினமலரின் செய்தித்தரவுகள். நான் படித்த கல்லுாரியிலேயே, நான் பேராசிரியரானபோது, என்னை ஈர்த்த தினமலரின் செய்திகள் என்ன தெரியுமா? கல்வி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தான். ஆம். இன்றைக்கும் தேர்வுக்கு செல்கின்ற, மாணவ, மாணவியர் மன எழுச்சியோடு, தேர்வு எழுதுவதற்கு, என்ன செய்ய வேண்டும். நன்கு படிக்க வேண்டும். இதற்கு மேலும், நல்லறிஞர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போன்றோரின், உற்சாகமான உரைகளை கேட்க வேண்டும். இந்த எண்ணத்திற்கு, பாதை வகுத்து கொடுத்ததே 'தினமலர்' தான். 'வெற்றி பெறுவோம், வென்று காட்டுவோம்' எனும் உறுதியை, அம்மாணவ,மாணவியரின் மனதில் ஏற்படுத்த, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை, தமிழகமெங்கும் நிகழ்த்திய பெருமை, தினமலருக்கே உண்டு. அதில் ஊர்தோறும் உரையாற்றிய மகிழ்வும் எனக்கு உண்டு. வெற்றி பெற்றால் போதுமா; மேற்கொண்டு என்ன படிப்பது; எவ்வாறு வேலைக்கு செல்வது எனும், அவர்களின் சிந்தனைக்கு விடை தருகிறது, 'வழிகாட்டி' நிகழ்ச்சி. இந்நிகழ்வின் வழியாக, பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெற்று, உலகின் பல நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர் என்றால், இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியது நம் 'தினமலர்'தான். தொடர்ந்து இன்றும், இவ்வரிய செயல்பாட்டை, இளையபாரதத்துக்கு செய்துவரும் தினமலருக்கு, நாம் மகிழ்வோடு 'சல்யூட்' அடிப்போம். என்னுடைய வாழ்க்கையில், நான் வெற்றி பெறும் போதெல்லாம், என்னோடு துணை நின்றது தினமலர் தான். கடந்த 2006ல் கலைமாமணி விருதையும், 2014ல் மகாகவி பாரதியார் விருதையும், அன்றைய தமிழக முதல்வரிடம் நான் பெற்றேன். அந்த புகைப்படங்களை முதன்முதலில் தினமலரில் வெளியிட்டு, எங்கள் குடும்பத்திற்கே மகிழ்ச்சியை தந்தது. அன்றைய அந்த பத்திரிகை பதிப்பு, இன்றைக்கும் எங்கள் வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கும் நாள்தோறும் 'தினமலர்' நாளிதழை, ஆர்வத்தோடு படித்து, மேடைகளில் பேசி, உலகெங்கும் சென்று நான் சாதனை படைக்க, எனக்கு உற்ற நண்பனாய் திகழ்வுது 'தினமலர்' தான் என்பதை, பெருமையோடு சொல்லுவேன். சென்னைப் பல்கலை அரங்கில், தினமலர் நடத்திய, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு இடையில், நான் மகிழ்வோடு உரையாற்றும், 'தினமலர்' படம் தான் எங்கள் வீட்டு வரவேற்பரையில் இருக்கும் புகைப்படங்களில் முக்கியமானது. இப்படத்தை பட்டம் வாங்கிய பெருமைபோல, நான் சட்டம் போட்டு வைத்து, வந்தவர்களுக்கு இன்றைக்கும் காட்டுகிறேன். பவள விழா காணும் தினமலரின், 50 ஆண்டு கால வாசகன் நான். வெள்ளி விழா, பொன்விழா இவற்றைக் கடந்து, பவளவிழா ஆண்டில் வெற்றி நடைபோடும் தினமலருக்கு வாழ்த்துகள். நுாற்றாண்டு மலரிலும், இன்னும் பல புதுமைகளையும், பெருமைகளையும் எதிர்பார்ப்போம். நான் படித்து வளர்ந்து மகிழ்ந்த தினமலரை, என் பேரன் பேத்திகளும், வருங்கால தலைமுறையினரும் படிப்பர், பயன்பெறுவர் எனும் நன்னம்பிக்கையோடும், வாழ்த்துகளோடும். கு.ஞானசம்பந்தன் தகைசால் பேராசிரியர் தியாகராசர் கல்லுாரி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை