இல்லாத செய்தி என்று எதுவும் இல்லை!
காலையில் மலரும் மலருக்கு, எப்பவுமே ஒரு கவர்ச்சி உண்டு. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். அதேபோல்தான் தினம் தினம் மலரும் 'தினமலர்' , அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இந்த மலர் எந்த வாசகத்தையும் விட்டு வைப்பதில்லை. எந்த வாசகரையும் விட்டு வைப்பதில்லை. ஆம், தினமலர் பத்திரிகையை எடுத்தாலே, அதில் தமிழகம், அரசியல், தேசியம், மாவட்டங்கள், விளையாட்டு, தொழில், கலை மற்றும் முதல் பக்க சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல், 'செகண்ட் பிரண்ட் பேஜ்' என்ற முக்கியமான ஒரு பகுதி, மிக அழகாக அரசியலை பிரதிபலிக்கும். கருத்துப்படம், பழமொழி, இதே நாளில் அன்று, பேச்சு பேட்டி அறிக்கை என, பல பல பகுதிகள். அதுமட்டுமல்ல, நாங்கள் கொடுக்கும் செய்தியை மட்டுமே படிக்க வேண்டும் என்பதில்லை, 'உங்களுக்கான இடம்' என்று வாசகர்களுக்கான இடத்தையும் 'தினமலர்' தருகிறது. எந்த அளவிற்கு 'தினமலர்' வாசகர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது என்பதை, இது பறை சாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக, காலையில் தினமலரை எடுத்தால், 'இல்லாத செய்தி' என்று எதுவும் இல்லை. சொல்லாத நிகழ்வுகள் எதுவும் இல்லை. மக்கள் மனதை வெல்லாது விடப் போவதில்லை என்ற அளவில், அனைத்து செய்திகளுமே சுவாரஸ்யம். சில பரபரப்பான செய்திகளை கூட, பரபரப்பு இல்லாமல் படிக்கும்படியும். சில விரைவு செய்திகளை கூட விறுவிறுப்பாகவும், தமிழக அரசியலை சுறுசுறுப்பாக, சுவை மாறாமல், மனம் மாறாமல், மனம் கோணாமல் நமக்கு தருவது 'தினமலர்'. தினமும் எட்டு ரூபாய் கொடுத்து வாங்கும் 'தினமலர்' வாசகர்கள் தான் எங்கள் முதலாளிகள் என்ற ஆசிரியர் ராமசுப்பு அவர்களின் கருத்து, மிக அழகாகவே பிரதிபலிக்கிறது. வாசகர்கள் படிப்பதற்கும், படித்ததை அவர்கள் மனது பிடிப்பதற்கும், 'தினமலர்' சாதனை படைத்து வருகிறது. பவள விழா கடந்து, பல பலம் பொருந்திய விழாக்களை கொண்டாட வேண்டும் என, வாழ்த்துகிறேன். தினம் தினம் மலரும் மலராக, இன்னும் பல்லாண்டுகள் மலர்ந்து, மணம் பரப்ப வேண்டும். மக்கள் மனதை அடைய வேண்டும் வாழ்த்துகள். அதிகாலை தினமலரின் தாமரை, அனைவர் மனதையும் தாமரை போல் மலர வைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் கவர்னர், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்