உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் வசூலிக்க தடை! தினமலர் செய்தி எதிரொலி

பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் வசூலிக்க தடை! தினமலர் செய்தி எதிரொலி

கோவை;நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குறிச்சி - குனியமுத்துார் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஒப்பந்தத்தை 'எல் அண்டு டி' நிறுவனம் எடுத்திருக்கிறது.தற்போது வீட்டு இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இதில், 'செப்டிக் டேங்க்' குழாயை மட்டுமே பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும்; ஆறு மீட்டர் வரை இலவசமாக குழாய் பதித்துக் கொடுக்க வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.ஆனால், வீடுகளில் 'இண்டியன்' கழிப்பறை கோப்பை இருக்கிறது; 'வெஸ்டர்ன்' கோப்பை இருந்தால் தான், 'கிராவிட்டி'யில் கழிவு நீர் செல்லும் என கூறி, வீட்டு உரிமையாளர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது.இதுதவிர, குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீரையும் பாதாள சாக்கடையில் இணைக்க, சதுரடி கணக்கில் 'ரேட்' பேசி, ரூ.15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இப்பணியை, 'சப்-கான்ட்ராக்டர்கள்' செய்திருக்கின்றனர். வசூலித்த பணத்துக்கு ரசீது கொடுக்கவில்லை.இந்த வேலைக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என, 'எல் அண்டு டி' நிறுவனத்தினரும், குடிநீர் வடிகால் வாரியத்தினரும் கூறுகின்றனர்.குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீரை, பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்தது ஏன் என்கிற கேள்விக்கு, எல் அண்டு டி நிறுவனத்தினரிடம் பதில் இல்லை; அவ்வாறு இணைப்பு கொடுக்க, இன்னொரு ஒப்பந்ததாரரை நியமித்தது ஏன் என்பதற்கும் பதில் இல்லை.இதுகுறித்து, நேற்றைய நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 'இனி, செப்டிக் டேங்க் இணைப்பு மட்டுமே வழங்க வேண்டும்; வேறெந்த வேலையும் செய்யக் கூடாது. வீட்டு உரிமையாளரிடம் பணம் வசூலிக்கக் கூடாது' என, எல் அண்டு டி நிறுவனத்தில் இருந்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் விசாரணை

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தினேன். 'செப்டிக் டேங்க்' இணைப்புக்கு பணம் வசூலிப்பதில்லை. சமையலறை, குளியலறை கழிவு நீரை இணைப்பது ஒப்பந்தத்தில் இல்லை; அப்பணிகளை வேறொரு ஒப்பந்ததாரர் மூலம் செய்ததாக கூறினர். இனி, அவ்வாறு செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ