செய்தி எதிரொலி: மாமல்லையில் தீராத போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்பு அகற்ற சப் - கலெக்டர் உத்தரவு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து வருகிறது. வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், பயணியர் அதிக அளவில் திரள்கின்றனர்.இந்நாட்களில், பயணியர் வாகனங்கள் அதிக அளவில் படையெடுக்கின்றன. பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பயணியர் நடக்கவும், வாகனங்கள் செல்லவும் முடியாமல் கடும் நெரிசல் ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், சுற்றுலா அலுவலர் சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்டோருடன், கிழக்கு ராஜவீதி, கடற்கரை சாலை, ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா நேற்று முன்தினம் பார்வையிட்டார்.சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளின் நீட்டிப்பையும், நடைபாதை கடைகளையும் அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க, அடையாள கயிறு கட்ட அறிவுறுத்தினார்.கடற்கரை சாலையில், நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ஸ்டெயின்லெஸ் கம்பி தடுப்பு அமைத்து, பயணியர் நடந்து செல்லவதற்கேற்ப வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில், நடைபாதை கடைகள், சாலையோரம் மட்டும் இருக்குமாறு ஒழுங்குபடுத்த அறிவுறுத்தினார்.கடற்கரை பகுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில், குறிப்பிட்ட பரப்பில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த திட்டமிடுவது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.பேருந்து நிலைய பகுதியில், நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.அப்போது, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், மூன்று போலீசார் மட்டுமே பணியில் உள்ளதாகவும், நெரிசல் நாட்களில், குறைந்தபட்சம் 20 போலீசார் தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.கூடுதல் போலீசார் இருந்தால் மட்டுமே, பிரதான சாலை சந்திப்புகள், முக்கிய இடங்களில் போலீசாரை நியமித்து, ஒருவழிப்பாதை செயல்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும் என விளக்கினார்.