பெரியகளக்காடி ஊராட்சியில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
சித்தாமூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், பெரியகளக்காடி ஊராட்சியில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில், பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சகதியாக மாறியதால், நடந்து செல்ல கூட முடியாமல் தவித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 2025-26ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 5.2 லட்சம் ரூபாயில், சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.