திறந்து கிடந்த வடிகால்வாய்க்கு ‛கான்கிரீட் மூடி அமைப்பு
ஓரிக்கை: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஓரிக்கையில், திறந்து கிடந்த மழைநீர் வடிகால்வாய்க்கு, நெடுஞ்சாலைத் துறையினர் கான்கிரீட் மூடி அமைத்தனர். காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை சாலையோரம், சாலை மட்டத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஓரிக்கை நான்கு முனை சந்திப்பு அருகில் மழைநீர் வடிகால்வாயின் மீது, கான்கிரீட் மூடி முறையாக மூடாததால் திறந்து கிடந்தது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க, திறந்து கிடக்கும் கால்வாய் மீது கான்கிரீட் மூடி போட்டு மூட வேண்டும் என, பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் உபகோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு நெடுஞ்சாலைத் துறையினர், திறந்து கிடந்த மழைநீர் வடிகால்வாய் மீது, கான்கிரீட் மூடி அமைத்தனர்.