தினமலர் செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டையில் புதிய மின்மாற்றி அமைப்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே, 500 கி.வாட் மின்மாற்றி இருந்தது. இதன் வாயிலாக, பஜார் பகுதியில் மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இரண்டு வாரத்திற்கு முன் இந்த மின்மாற்றி பழுதடைந்தது.இதனால் பஜார் பகுதியில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர். தற்காலிகமாக மாற்று இடத்தில் உள்ள மின்மாற்றி வாயிலாக மின் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் இது போதுமானதாக இல்லை.இதுகுறித்து பொதுமக்கள், வியாபாரிகள் ஊத்துக்கோட்டை துணை மின்நிலையத்தில் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றியை நேற்று பொருத்தினர். இதனால் மின்விநியோகம் சீரானதால், குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர்.