தினமலர் செய்தி எதிரொலி அரசு பள்ளிகள் சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 12 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த மார்ச் முன் வரை மேற்கண்ட பள்ளிகளை திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வந்தது. தொடர்ந்து ஏப்ரல் முதல் நகராட்சியில் செயல்படும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நகராட்சி நிர்வாகத்திடம் ஒன்றிய நிர்வாகம் ஒப்படைத்தது.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை, குடிநீர் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் இல்லை. மேலும், பள்ளி கட்டடங்கள் பழுதாகி வந்தன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் பள்ளிகள் பழுது பார்ப்பது, குடிநீர், கழிப்பறை வசதி போன்றவைக்கு முதற்கட்டமாக, 1.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி கூறியதாவது: நகராட்சியில் இயங்கி வரும், 12 அரசு பள்ளிகளில், கட்டடம் பழுது பார்த்தல், தரைத்தளம், மின்விளக்கு, மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்த, 1.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் பணி முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.★★