செய்தி எதிரொலி குடிநீர் கிணறு சீரமைப்பு ஊராட்சி நிர்வாகம் சுறுசுறு
செய்யூர்:சித்தாமூர் அருகே விளாங்காடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விளாங்காடு காலனி பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் கிணறு முறையான பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி, புறாக்களின் வாழ்விடமாக மாறியது. இதனால், புறாக்கள் குடிநீர் கிணற்றில் முட்டையிட்டு குஞ்சி பொறிப்பதாகவும், குடிநீரில் புறா எச்சங்கள் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, விளாங்காடு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் கிணற்றை சுற்றியிருந்த புதர்களை அகற்றி சீரமைக்கப்பட்டுள்ளது.