தேக்கமடைந்திருந்த நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி துவக்கம்
உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, அம்மையப்பநல்லுாரில் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்திருந்த, நெல் மூட்டை லாரிகள், வேடபாளையம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளது. உத்திரமேரூர் தாலுகா, அம்மையப்பநல்லுார் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, வேடபாளையம் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்வது வழக்கம். ஆனால், இந்த கொள்முதல் நிலையத்திற்கு குறித்த நேரத்திற்கு லாரிகள் வராததால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், லாரிகள் வராததால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியும் நிறுத்தப்பட்டிருந்தது. சில நாட்களாக அப்பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. அதில், கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வந்தன. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கப்பட்டு, லாரிகள் மூலமாக, சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.