அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தமிழகத்தில் தி.மு.க., மீதான வெறுப்பால், மக்கள் அ.தி.மு.க., வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டணி குறித்து, தேர்தல் நெருக்கத்தில் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி மட்டுமே முடிவெடுப்பார். -டவுட் தனபாலு: உங்களது கடந்த கால ஆட்சி நல்லா இருந்து, அதை மிஸ் பண்ணிட்டோமேன்னு மக்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிச்சா கூட ஏத்துக்கலாம்... ஆனா, தி.மு.க., மீதான வெறுப்பால தான், ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையே தேவலைன்னு உங்களை ஆதரிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்: மும்மொழிக் கொள்கையை தமிழகம் விரும்புவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதற்காக, பா.ஜ.,வினர் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். யாரும் கையெழுத்திட ஆர்வம் காட்டவில்லை. அரசியல் பரபரப்புக்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருக்கும் கேவலமான செயல்தான், கையெழுத்து இயக்கம். டவுட் தனபாலு: கையெழுத்து இயக்கம் நடத்துறது கேவலமான செயல்னு சொன்ன ஒரே அரசியல்வாதி நீங்களாதான் இருப்பீங்க... அப்படி என்றால், 'நீட்' தேர்வுக்கு எதிராக, 1 கோடி கையெழுத்து இயக்கத்தை உங்க இளம் தலைவர் உதயநிதி நடத்தினாரே... அதுவும் கேவலமான செயல்தான்னு பா.ஜ.,வினர் சொன்னா, 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: அனைத்துக்கும் தேர்வு வைக்கின்றனர்; நாட்டையே நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தேர்வு எழுதுவதில்லை. இந்த நாட்டில் மட்டும்தான், எந்த தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும். ஒரு வக்கீல், நீதிபதியாகவும், மருத்துவம் படிக்கவும், கலெக்டராகவும், அதிகாரிகளாகவும் தேர்வு எழுத வேண்டும். ஆனால், நாட்டை ஆள, எந்த தேர்வும் எழுத வேண்டாம்.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... கிராமத்தை நிர்வகிக்கும் வி.ஏ.ஓ.,வுக்குக் கூட, தேர்வு நடத்தி தான் பணி நியமனம் தர்றாங்க... ஆனா, 145 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிற ஆட்சி, அதிகாரத்தில் அமரும் அரசியல்வாதிகளுக்கு எந்த தேர்வும் இல்லாதது பெரும் குறைதான்... தப்பித் தவறி அவங்களுக்கு தேர்வு வச்சாலும், இன்று இருக்கும் எந்த அரசியல்வாதியும், நீங்க உட்பட தேறவே மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!