சிவகங்கை, காங்., - எம்.பி., கார்த்தி: நெடுஞ்சாலை, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது விற்க வேண்டும். மது வாங்குவோரிடம் ஆதார் அடையாள எண் வாங்க வேண்டும். 'டிஜிட்டல்' முறையில் பணம் வசூலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கு வெற்றியடையும் கொள்கை அல்ல. ஏற்கனவே கள்ளச்சாராயம் உள்ளது. பூரண மதுவிலக்கு என்றால், மேலும் கள்ளச்சாராயம் அதிகரிக்கும். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... காங்கிரசில் இருந்தாலும், உங்க கட்சியின் கொள்கைக்கு எதிராக பேசும் துணிச்சல் உங்களிடம் மட்டும் தான் இருக்கு... அந்த வகையில், மதுவிலக்கு என்றைக்குமே சாத்தியம் இல்லை என்ற உண்மையை, பளிச்னு சொன்ன உங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: காங்., கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம். அனைத்து அரசி யல் கட்சிகளுமே, ஆட்சிக்கு வர வேண்டும் என்றே விரும்புகின்றன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். டவுட் தனபாலு: 'கூட்டணி ஆட்சியில் சிறப்பான நிர்வாகத்தை தர முடியாது' என்பதை ஏத்துக்குறீங்களா... 2004 - 2014 வரை மத்தியில் நடந்த, காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நடந்த ஏகப்பட்ட ஊழல் களே இதற்கு சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: விழுப்புரம் மாவட்டம், கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் நிலத்தை, தனிநபர் அபகரிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, மேல்மலையனுார் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியினர், தனிநபர் ஒருவரின் நில அபகரிப்புக்கு ஆதரவாக களமிறங்கி, 33 வயது ஏழை விவசாயியின் தற்கொலைக்கு காரணமாகிஇருப்பது கண்டிக்கத்தக்கது. டவுட் தனபாலு: ஏழைகள், பாட்டாளிகளின் தோழர்கள்னு சொல்ற மார்க்சிஸ்ட் கட்சியிலும், இப்படியும் சிலர் இருக்காங்களா... திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்த சகவாச தோஷம் காரணமோ என்ற, 'டவுட்' தான் வருது!