நடிகர் எஸ்.வி.சேகர்: வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும். ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர். தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., வளர்ச்சி என்பது ஊதப்பட்ட பலுான் போன்றது; பார்த்தால் பெரிதாக தெரியும். ஆனால், சின்ன ஊசி குத்தினால் கூட வெடித்துச் சிதறி விடும். தமிழக பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தால், கட்டாயம் அ.தி.மு.க.,வும் மண்ணை கவ்வும். டவுட் தனபாலு: பா.ஜ., - அ.தி.மு.க., - காங்கிரஸ்னு பல கட்சிகளை பார்த்துட்டு, கடைசியா தி.மு.க.,வுக்கு சாமரம் வீச வந்திருக்கீங்க... ஆனா, எந்த கட்சிக்கும் விசுவாசமாக இல்லாத உங்களை, அறிவாலயம் தரப்பு அரவணைக்குமா என்பது, 'டவுட்'தான்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தி.மு.க., - நாம் தமிழர் மோதல். தி.மு.க., - பா.ஜ., மோதல்; தி.மு.க., - த.வெ.க., மோதல், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிகள் மோதல், இவ்வளவு ஏன், தி.மு.க., - வி.சி., மோதல் என்றுகூட பல தலைப்புகளில் செய்திகளை பார்த்திருப்பீங்க. ஆனா, எங்கேயாவது தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் என செய்தி பார்த்திருக்கீங்களா? ஏன்னா, இப்போ அவங்க எல்லாம் திராவிட பங்காளிகள் ஆகிட்டாங்க.டவுட் தனபாலு: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சட்டசபைக்குள்ள மட்டும்தான், ஏதோ ஒப்புக்கு வாக்குவாதம் பண்ணிக்கிறாங்க... 'தமிழகத்துல நம்ம ரெண்டு பேரை தவிர, புதுசா யாரும் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்துடக் கூடாதுன்னு ரெண்டு கட்சிகளுக்கும் இடையில எழுதப்படாத ஒப்பந்தம் இருக்குமோ' என்ற, 'டவுட்' இவருக்கும் வந்துடுச்சோ?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்: தி.மு.க., அரசில் முன்பு நிதியமைச்சராக இருந்த தியாகராஜன், 'டாஸ்மாக்கில், 20,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடக்கிறது, அது எங்கு போகிறது என தெரியவில்லை' எனக் கூறியிருந்தார். தற்போது, 'டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது' என, அமலாக்கத் துறையே கூறியுள்ளது.டவுட் தனபாலு: சொந்த கட்சியின் அமைச்சரே, 20,000 கோடிக்கு ஊழல் நடக்குன்னு சொல்லியிருந்த சூழல்ல, அமலாக்கத் துறை கணக்கு, ரொம்ப கம்மியா இருக்கே... அமைச்சர் சொன்னதுக்கும், அமலாக்கத் துறை சோதனைக்கும் இடைப்பட்ட காலத்துல ஊழல் அளவை குறைச்சுட்டாங்களா அல்லது அமலாக்கத் துறை சரியா கணக்கு போடலையா என்ற, 'டவுட்'தான் வருது!