ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு: கவர்னரின் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், வரும் 25, 26ல் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி கூட்டியுள்ளார். இதில், துணைவேந்தர்கள் பங்கேற்பரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள், நிச்சயம் பங்கேற்க மாட்டார்கள்.டவுட் தனபாலு: அந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதியும் கலந்துக்க இருக்காரு... நீங்களோ, போகக் கூடாதுன்னு மிரட்டுறீங்க... போகாம இருந்தால், துணை ஜனாதிபதியை அவமதித்தது மாதிரி ஆகிடும் என்பதால், துணைவேந்தர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாங்க என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!மூத்த தலைவர் ப.சிதம்பரம்: நேஷனல் ஹெரால்டு வழக்கில், பணமோசடி அல்லது நிதி முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டவுட் தனபாலு: சரி விடுங்க... நீங்கதான் சட்டமும் படிச்சிருக்கீங்களே... நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் சார்புல நீங்களே ஆஜராகி, அவங்க மீது குற்றமில்லைன்னு நிரூபிக்கலாமே... இதன் வாயிலா, அவங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாங்க... கட்சியில உங்களுக்கும், உங்க மகனுக்கும் முக்கிய பதவிகள் தேடி வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!வி.சி., கட்சி தலைவர் திருமா வளவன்: தமிழக மின்வாரியத்தில் மட்டும், 65,000 காலி பணியிடங்கள் உள்ளன. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், தட்டச்சுப் பணிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பல ஆயிரம் பேர் உள்ளனர். 'மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தெரிவித்துள்ளது. அதன்படி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.டவுட் தனபாலு: என்னமோ, 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தந்த வாக்குறுதிகள் எல்லாத்தையும் நிறைவேற்றி விட்ட மாதிரியும், இந்த வாக்குறுதியை மட்டும் மறந்துட்டது மாதிரியும் சொல்றாரே... 'தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள்'னு பட்டியல் போட்டா, பெரிய புத்தகமே போடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!