உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி யின் தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: தி.மு.க.,கொள்கைகளுக்கும், த.வெ.க., கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தி.மு.க.,வை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை, ஆளுங்கட்சியான பின், தி.மு.க., செயல்படுத்தவில்லை. இந்த நிலையை மாற்றி, தமிழகத்தில் புதிய அரசியல் களத்தை உருவாக்குவதுதான், த.வெ.க.,வின் பிரதான நோக்கம். அதை நோக்கி வேகமாக செல்கிறோம்.டவுட் தனபாலு: நிறைவேற்றாத வாக்குறுதிகளை எல்லாம், மீதமிருக்கும் காலத்தில் நிறைவேற்றி முடிக்க தி.மு.க., தரப்பு திட்டமிட்டிருக்கு... தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கிடைக்கிற திட்டங்கள் தான், ஓட்டுகளாக மாறும் என்பதால், புதிய அரசியல் களத்தை உருவாக்கும் உங்க எண்ணம் பலிக்குமா என்பது, 'டவுட்'தான்!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதால், நிடி ஆயோக் கூட்டத்தை, நான் புறக்கணிக்கிறேன்' என, வீராவேசமாக பேசிய பொம்மை முதல்வர் ஸ்டாலின், தற்போது நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, டில்லிக்கு பறக்கிறாராம். தமிழக மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று, '2ஜி'க்காக அப்பா கருணாநிதி டில்லி சென்றார். இன்று, 'டாஸ்மாக்' தியாகி தம்பிக்காக ஸ்டாலின் செல்கிறாரோ; வெள்ளைக் குடைக்கு வேலை வந்து விட்டதோ? டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., கூட்டணியில் நீங்க இருக்கீங்க... தி.மு.க., எதிர்த்தாலும், வெள்ளைக் குடை பிடிச்சுட்டு சமாதானம் பேசினாலும், அந்த கட்சி தலைமை ரெண்டையும் ஏற்றுக்கொள்ளும் என்பது போல கருத்து சொல்றீங்களே... இது, கூட்டணி தர்மத்தை மீறிய செயல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: 'டாஸ்மாக்' ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் அறிக்கை வந்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தி.மு.க.,வின் ஒரு குடும்பம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து திசை திருப்ப, தமிழுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் ஆகியோர் நாடகமாடுகின்றனர்.டவுட் தனபாலு: அதானே... டாஸ்மாக் முறைகேடுக்கும், தமிழுக்கும் என்ன சம்பந்தம்... அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமோ, பதிலோ தர வழியில்லாம தான், தமிழை இழுக்கிறாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மே 23, 2025 21:50

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் அறிக்கை கண்டு திராவிட மாடல் அரசுக்கு குளிர் ஜுரம் மென்று பாஜக ராஜா சீண்டி பார்த்தாலும், உச்சநீதிமன்றம் அமலாகத்துறை ரெய்டு செய்தது தவறுயென்று போட்டு பின்னி எடுக்குதே ராஜா..


D.Ambujavalli
மே 23, 2025 03:39

அவர் வெளிப்பார்வைக்காக நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்கிறேன் என்றாலும் பிறந்த குழந்தைகூட அதை நம்பவே இல்லை நீங்கள் இவ்வளவு வியாக்யானம் செய்யவே தேவையில்லை கூட்டணி ‘தர்மம்’ என்று கண்டுக்காமல் இருந்திருந்தால் தமிழக ஊடகங்கள் உங்கள் மௌனத்துக்கு ஆயிரம் அர்த்தம் கண்டுபிடித்து விளாசியிருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை