தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: கோவையில், 'அரபி கல்லுாரி' போர்வையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக, நான்கு பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 2022ல், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என, தி.மு.க., அரசு பூசி மெழுக முயன்றது. கோவை சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது தி.மு.க., அரசு. மொத்தத்தில், பயங்கரவாதிகளின் புகலிடமாக கோவை மாறி இருக்கிறது. டவுட் தனபாலு: கடந்த 1998ல் நடந்த கருணாநிதி ஆட்சியின் போது தான், கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 58 பேர் பலியானாங்க... தி.மு.க., ஆட்சிக்கு அது ஒரு கரும்புள்ளியாகவே அமைந்து விட்டதை, இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!மேட்டூர் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம்: பா.ம.க.,வில் நிலவும் தந்தை --- மகன் பிரச்னை எதிர்பாராத ஒன்று. இதே மாதிரியான பிரச்னைகள் தலையெடுப்பதும், பின் இருதரப்பும் சமாதானமாவதும் எல்லா குடும்பங்களிலும் நடப்பது தான். குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்னையை, ஊடகங்கள், மற்றவர்கள் பெரிதாக்கக் கூடாது.டவுட் தனபாலு: நீங்க சொல்றது சரிதான்... ஆனா, உங்க கட்சியின் தந்தை - மகன் பஞ்சாயத்துல, யார் பக்கம் போறதுன்னு தெரியாம நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனைகள்ல அல்லவா போய் படுக்கிறாங்க... அதை டாக்டர்களான தந்தை - மகன்னு ரெண்டு தரப்புமே யோசனை பண்ணி பார்க்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!பத்திரிகை செய்தி: திருப்பரங்குன்றம் கோவிலில் வி.சி., தலைவர் திருமாவளவன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு நெற்றியில் விபூதி பூசப்பட்டது. தரிசனம் முடித்து திரும்பும் நிலையில் ஒரு தம்பதி, திருமாவளவனுடன் செல்பி எடுக்க விரும்பினர். தன் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு செல்பி எடுத்து கொடுத்தார். இதுகுறித்து திருமா வளவனிடம் கேட்ட போது, 'ஆறு மணி நேரமாக நெற்றியில் விபூதி வைத்திருந்தேன். அதை யாரும் கவனிக்கவில்லை. நாள் முழுதும் விபூதியை நெற்றியில் வைத்திருக்க முடியுமா' என, எதிர்கேள்வி எழுப்பினார்.டவுட் தனபாலு: நெற்றியில் பூசிய விபூதியை சுமக்க முடியாத அளவுக்கு சுமையாக நினைக்கிறாரோ... அதே மாதிரி, 'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ.,வா இருந்த இவரது கட்சியினர் போதும்; மாற்று கட்சியினருக்கு வாய்ப்பளிப்போம்'னு ஹிந்துக்களும் நினைச்சுட்டா, இவங்க பாடு என்னவாகும் என்ற, 'டவுட்' வருதே!